சென்னை: மழைநீர் வடிகால் கட்டமைப்பு வழித்தடத்தில் பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்று கூடுதல் தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதன்படி ஆலந்தூர் மண்டலம், வார்டு-157, மணப்பாக்கம் பகுதி மற்றும் திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-68, சிவ இளங்கோ சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பணி ஆணையில் குறிப்பிட்டுள்ள காலக் கெடுவிற்குள் முடிக்கவும், மேலும், மழைநீர் வடிகால் கட்டமைப்பு வழித்தடத்தில் பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் 157-வது வார்டில் அடையாறு ஆற்றின் நீர் செல்லும் பாதையின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நடுதல், தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், சிட்டிஸ் திட்டத்தின் கீழ் 137-வது வார்டு நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப் பள்ளியில் ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பணி, சீர்மிகு நகர திட்ட நிதியின் கீழ் ரூ.45 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வில்லிவாக்கம் ஏரி புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.