ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மூன்று பிரதான தொடர்கள் ஆரம்பம்
ஜீ தமிழ் தொலைக்காட்சி கதை சார்ந்த டிவி தொடர்களை ஒளிபரப்புவதில் மிகவும் பிரபலமாகத் திகழ்கிறது. இப்போது பிரதான நேரத்தில் மூன்று முக்கிய தமிழ் தொடர்களை ஒளிபரப்பு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இவை அனைத்தும் தமிழ் குடும்ப மகளிரை இதயபூர்வமாக கவரும் கதைக்களம் கொண்டவையாகும்.
முதல் முறையாக ஒரு மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையிலான அற்புதமான உறவை வெளிப்படுத்தும் குடும்ப நாடகமாக அமுதாவும் அன்னலக்ஷ்மியும் தொடர் இருக்கும். இரண்டாவது குடும்ப நாடகம் மாரி, இந்த இரண்டு தொடர்களும் ஜூலை 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. மூன்றாவது தொடரான மீனாக்ஷி பொண்ணுக என்ற தொடர், ஒரு அம்மா அவரது மூன்று மகளைப் பற்றியதாகும். இது விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த மூன்று தொடர்கள் ஒளிபரப்பாவது தொடர்பான அறிவிப்பை ஜீ தமிழ் தொலைக்காட்சி ஊடக சந்திப்பின்போது வெளியிட்டுள்ளது.
அமுதாவும் அன்னலக்ஷ்மியும்
முதலாவது தொடரான அமுதாவும் அன்னலக்ஷ்மியும் தொடர் அமுதாவின் கதையைப் பற்றியது. தனது படிப்பை முடிக்க வேண்டும் என்ற லட்சியம் தாயின் மறைவினால் இவருக்கு ஈடேறாமல் போனது. நேர்மையான, துணிவுமிக்க பெண்ணான அமுதா, ஒரு ஆசிரியரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். அதன் மூலம் தனது படிப்பை தொடர லட்சியக் கனவுக்கு அவர் உதவுவார் என்று நினைக்கிறார். இதில் மற்றொரு கதாபாத்திரமான அன்னலட்சுமி, மிகவும் தைரியமிக்க பெண். தனது குடும்பம் இழந்த பெருமையை மீட்டெடுக்க விரும்புவர். தனது மகன் செந்தில் ஆசிரியராக வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர். ஆனால் பள்ளிக்கூடத்தில் பியூன் வேலை பார்க்கும் செந்தில், அப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிவதாக தனது குடும்பத்தினரிடம் பொய் சொல்லியிருக்கிறார். அமுதாவின் கனவு நிறைவேறியதா? செந்தில் கூறிய பொய் அமுதாவுக்கும், அன்னலக்ஷ்மிக்கும் தெரிந்தபோது என்ன நடந்தது என்பதை விவரிப்பதே இந்தத் தொடர். இதில் கருத்தம்மா புகழ் ராஜ்ஸ்ரீ, கண்மணி மனோகர் மற்றும் அருண் பத்மநாபன் ஆகியோர் நடித்துள்ளனர். அமுதாவும் அன்னலக்ஷ்மி தொடர் ஜூலை 4-ம் தேதியிலிருந்து திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும்.
மாரி
யாரடி நீ மோகினி வெற்றித் தொடரைத் தொடர்ந்து அதே பாணியில் அமானுஷ்ய திரில்லர் கதைக் களம் கொண்டதாக மாரி தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. சமயபுரம் பின்னணியில் மாரியை சுற்றி இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. வரம் பெற்ற சிறுமிக்கு எதிர்காலத்தை அறியும் அமானுஷ்ய சக்தி கிடைக்கிறது. தன்னைச் சுற்றியிருக்கும் மக்கள் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும் என்று விரும்புகிறாள் மாரி. தனது சக்தி மூலம் அவர்களுக்கு உதவுகிறார். ஒருகட்டத்தில் அவர் கிராம மக்களாலும் குடும்பத்தினராலும் புறக்கணிக்கப்படுகிறாள். அவளது திருமணத்துக்குப் பின் அவள் கணவன் இறந்துவிடுவான் என்று முன்கூட்டியே தெரிந்துவிடுகிறது மாரிக்கு. அவள் கணவன் இறந்துவிடுவானா, என்ன நிகழப்போகிறது என்ற திருப்பங்களைக் கொண்டதுதான் மாரி. இத்தொடரில் ஆஷிகா, சேது திரைப்பட புகழ் அபிதா, டெல்லி கணேஷ், வனிதா விஜயகுமார், சோனியா, ஈரமான ரோஜாவே புகழ் சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயற்கை அமானுஷ்ய சக்தி கதைக்களம் கொண்ட இந்த தொடரில் பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிச்சயம் பார்ப்வர்களுக்கு விறுவிறுப்பூட்டும். மாரி தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூலை 4 முதல் ஒளிபரப்பாகும்.
மீனாக்ஷி பொண்ணுக
இதில் மூன்றாவது தொடரான மீனாக்ஷி பொண்ணுக தொடர் ஜீ கன்னடம் மற்றும் ஜீ தெலுங்கு மொழிகளில் புத்தக்கனா மக்களு மற்றும் ராதாம்மா குத்ரு என்ற பெயரில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்ற தொடராகும். இதன் தமிழாக்கமாக மீனாக்ஷி பொண்ணுக தயாரிக்கப்பட்டுள்ளது. இது மீனாட்சி மற்றும் அவரது மூன்று மகள் யமுனா, சக்தி, துர்கா ஆகியோரைப் பற்றியதாகும். எளிமையான யதார்த்த வாழ்வை புரிந்த மீனாக்ஷி தனது மூன்று மகள்களை எப்படி வளர்த்து ஆளாக்குகிறாள் என்பதைப் பற்றியது இந்தத் தொடர். ஆண்குழந்தை பெற்றுத் தரவில்லை என்பதால் கணவரால் கைவிடப்பட்ட மீனாக்ஷி, மிகவும் கஷ்டப்பட்டு தனது மூன்று மகள்களை நன்கு படிக்க வைக்கிறாள். தனது மகள்கள் மூவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதே அவரது லட்சியம். ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார் சக்தி. மீனாக்ஷி ரெஸ்டாரண்ட் என்ற சிறிய உணவு விடுதியை நடத்தி அதன் மூலம் ஸ்திரமான வருமானம் ஈட்டிவருகிறார். பன்முக திறன் கொண்ட நடிகையும் இருமுறை தேசிய விருதுபெற்ற வீடு திரைப்பட புகழ் அர்ச்சனா முதல் முறையாக இத் தொடரில் நடிக்கிறார். தனது யதார்த்தமான அழுத்தமான நடிப்பின் மூலம் இந்த கதைக்கு வலு சேர்த்துள்ளார். இவர் தவிர பிரபல நட்சத்திரங்களான காயத்ரி யுவ்ராஜ், பிரானிகா தக்ஷு மற்றும் மோக்ஷிதா ஆகியோர் யமுனா, துர்க்கா மற்றும் சக்தி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் வெற்றி கதாபாத்திரத்தில் டிவி நடிகர் ஆர்யன் நடித்துள்ளார். மீனாக்ஷி பொண்ணுக தொடர் விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
இந்த மூன்று தொடர்கள் குறித்த அறிவிப்பு பிரம்மாண்மான ஊடக சந்திப்பில் வெளியிடப்பட்டது. இதில் மாரி மற்றும் அமுதாவும் அன்னலக்ஷ்மியும் தொடரில் பங்கேற்ற நடிகர், நடிகையர்களும் பங்கேற்றனர். இந்தத் தொடர்களை பிரபலப்படுத்த ஜீ தொலைக்காட்சி வாங்க பார்க்கலாம் – இது நம்ம நேரம் என தலைப்பிட்டுள்ளது. இதில் நடிகை ஸ்நேகா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் சங்கீதா ஆகியோர் ஒவ்வொரு தொடரின்போதும் நேரலையில் உரையாடி பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தொடர் நடிகர், நடிகைகளான மாரி – ஆஷிகா, சேது புகழ் அபிதா, டெல்லி கணேஷ், ஆதர்ஷ், வனிதா விஜயகுமார் மற்றும் அமுதாவும் அன்னலக்ஷ்மியும் தொடரில் நடிக்கும் சோனியா, கண்மணி, கருத்தம்மா புகழ் ராஜ்ஸ்ரீ, அருண் பத்மநாபன் மற்றும் மீனாக்ஷி பொண்ணுக தொடரில் நடிக்கும் இரண்டு முறை தேசிய விருது பெற்ற வீடு திரைப்பட புகழ் அர்ச்சனா, மோக்ஷிதா, காயத்ரி யுவ்ராஜ், பிரானிகா, ஆர்யன் ஆகியோர் தங்களது தொடர்கள் குறித்து விளக்கினர்.