எரிவாயு விலை உயர்வை எதிர்கொள்வதற்கான உதவிகள் முதல், குறைந்தபட்ச ஊதிய உயர்வு வரை, 2022 ஜூலை, ஜேர்மனியில் பல முக்கிய மாற்றஙக்ளைக் கொண்டு வர உள்ளது.
அவற்றில் சிலவற்றைக் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்…
கோவிட் பரிசோதனை இனி அனைவருக்கும் இலவசம் கிடையாது
ஜேர்மனியில், கோவிட் பரிசோதனை இனி அனைவருக்கும் இலவசம் கிடையாது. பரிசோதனைக்கான கட்டணம் 3 யூரோக்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், சில குழுக்களுக்கு மட்டும் அந்த கட்டணத்திலிருந்து விதிவிலக்களிக்கப்பட்டுள்ளது.
குடும்பங்களுக்கு நிதி உதவி
ஆற்றல் உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜூலை மாதத்தில் Kinderbonus என்ற பெயரில் தகுதியுடைய குழந்தைகளுக்கு ஆளுக்கு 100 யூரோக்கள் வழங்கப்பட உள்ளது.
அத்துடன், அதிகரித்துவரும் பணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கருத்தில்கொண்டு, சமூக உதவி பெறுவோர், Hartz-IV மற்றும் புகலிட உதவி பெறுவோருக்கு இம்மாதத்தில் இரண்டு முறை நிதியுதவி வழங்கப்பட உள்ளது. பெரியவர்களுக்கு ஆளுக்கு 100 யூரோக்களும், சிறுவர்களுக்கு ஆளுக்கு 20 யூரோக்களும் வழங்கப்பட உள்ளது.
9 யூரோக்கள் பயணச்சீட்டு மற்றும் எரிபொருள் வரி குறைப்பு
9 யூரோக்கள் பயணச்சீட்டு மற்றும் எரிபொருள் வரி குறைப்பு ஆகிய திட்டங்கள் ஆகத்து மாதம் இறுதி வரை தொடர்கின்றன.
மறுசுழற்சி ஆற்றல் சட்டம் முடிவுக்கு வருகிறது
உக்ரைன் ரஷ்யப் போர் காரணமாக எரிபொருட்கள் விலை எக்கச்சக்கமாக உயர்ந்துவரும் நிலையில், மக்களுக்கு உதவுவதற்காக மறுசுழற்சி ஆற்றல் சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஜேர்மனி அரசு முடிவு செய்துள்ளது.
குறைந்தபட்ச ஊதிய உயர்வு
சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் தேர்தலுக்கு முன்பே அறிவித்ததன்படி, குறைந்தபட்ச ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட உள்ளது. ஜனவரியில் 9.82 யூரோக்களாக அது உயர்த்தப்பட்ட நிலையில், ஜூலையில் அது 10.45 யூரோக்களாக உயர்த்தப்பட உள்ளது. படிப்படியாக உயர்த்தப்பட்டு, 2022 அக்டோபரில் குறைந்தபட்ச ஊதியம் 12 யூரோக்களாக உயர்ந்திருக்கும்.
ஓய்வூதியத் தொகை அதிகரிப்பு
ஜேர்மனியில் ஓய்வூதியம் பெறுவோர், இந்த மாதம் முதல் கூடுதல் தொகை பெற இருக்கிறார்கள். முன்பு மேற்கு ஜேர்மனி என அழைக்கப்பட்ட பகுதியில் வாழ்வோருக்கு ஓய்வூதியத் தொகை 5.35 சதவிகிதமும், கிழக்கு ஜேர்மனி என அழைக்கப்பட்ட பகுதியில் வாழ்வோருக்கு 6.12 சதவிகிதமும் அதிகரிக்கப்படுகிறது.
ஓட்டுநர் உரிமம் டிஜிட்டல் மயமாக்கும் திகதி நெருங்குகிறது
1953க்கும் 1958க்கும் இடையில் பிறந்த ஜேர்மன் மக்கள், 1999க்கு முன் காகித வடிவில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்களை, டிஜிட்டல் உரிமமாக மாற்றிக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் அவர்களை எச்சரிக்கும் வகையில் அவர்களுக்கு அபராதம் ஒன்று விதிக்கப்படும். காகித வடிவில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்களை டிஜிட்டல் உரிமமாக மாற்ற கடைசி திகதி ஜூலை 19 என அறிவிக்கபட்டுள்ளது.
புதிய வாடகை சட்டம் அமுலுக்கு வருகிறது
ஜூலை முதல், அதாவது இந்த மாதத்திலிருந்து, வீடுகளில் வாடகைக்கு வசிப்போரும், வீட்டு உரிமையாளர்களும், அதிகாரிகள் கேட்கும்போது வீட்டு வாடகை குறித்த தகவல்களை கையளிக்கவேண்டும். மறுப்பவர்களுக்கு 5,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும். பெரிய நகரங்களில், வாடகைகளை ஒப்பீடு செய்வதற்காக இந்த திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.
பர்சல்கள் அனுப்புவதற்கான கட்டணம் அதிகரிப்பு
DHL மூலம் பார்சல்கள் அனுப்புவோர், இந்த மாதம் முதல் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.