புதுடெல்லி: டெல்லியில் இருந்து ஜபல்பூருக்கு சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம், கேபினில் புகை கிளம்பியதால் டெல்லி விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. தலைநகர் டெல்லியில் இருந்து ஜபல்பூருக்கு இன்று காலை ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென கேபினில் இருந்து புகை வெளியேறியது. விமான நிலையத்தில் இருந்து 5,000வது அடி தூரத்தை கடந்த போது கேபினில் புகை வெளியேறியதால் விமான ஊழியர்கள், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உஷாரான விமானி, உடனடியாக ஸ்பைஸ்ஜெட் விமானத்தை பத்திரமாக டெல்லி விமான நிலையத்திற்கு மீண்டும் கொண்டு வந்தார்.இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘டெல்லியில் இருந்து ஜபல்பூருக்கு இயக்கப்படும் விமானம், சுமார் 5,000 அடி தூரத்தை கடந்ததும் கேபினில் இருந்து புகை வெளியேறியது. அதனால் டெல்லி விமான நிலையத்திற்கு மீண்டும் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்’ என்றார். விமானத்தின் உள்ளே புகை மூட்டம் காணப்பட்ட வீடியோ மற்றும் டெல்லி விமான நிலையத்தில் விமானம் மீண்டும் தரையிறங்கிய காட்சிகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.கடந்த 15 நாட்களில் ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறங்குவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஜூன் 19ம் தேதியன்று, 185 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்ற விமானம் இடதுபக்க என்ஜினில் தீப்பிடித்ததால் பாட்னாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர், பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.