சென்னை: கரோனா தடுப்பூசி செலுத்தி ஓராண்டைக் கடந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதால் பூஸ்டர் தவணையை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
உலகம் முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை தினசரி தொற்று பாதிப்புள்ளது. தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி, பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.
கரோனா தொற்றுக்கு மிகப்பெரிய பாதுகாப்பாக தடுப்பூசி உள்ளது. முதல் தவணை 95 சதவீதத்தினருக்கும், 2-ம் தவணை 85 சதவீதத்தினருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி கடந்த மாதத்துக்கு முன்பு வரை 88 சதவீதமாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதுதான்.
தடுப்பூசி செலுத்தி ஓராண்டை கடந்தவர்களுக்கு நோய் எதிர்ப்புசக்தி படிப்படியாகக் குறைகிறது. அதனால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் பூஸ்டர் தவணை தடுப்பூசியை உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.