திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை கடந்த 2017ம் ஆண்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும் வழியில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகையின் முன்னாள் டிரைவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். பலாத்காரத்திற்கு பிரபல நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 85 நாள் சிறைவாசத்திற்கு பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பலாத்கார சம்பவம் நடந்து 5 வருடங்களுக்கு மேல் ஆன பின்னரும் இதுவரை விசாரணை முடியவில்லை. இந்நிலையில் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் 3 முறை கால அவகாசத்தை நீட்டிக் கொடுத்தது. இதற்கிடையே நடிகை பலாத்காரம் செய்யப்பட்டபோது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் நடிகர் திலீப்பிடம் இருப்பதாக பாலச்சந்திரகுமார் என்பவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த வழக்கில் தொடர் விசாரணை நடத்த அனுமதி கோரி குற்றப்பிரிவு போலீசார் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். இதை தொடர்ந்து 3 மாதத்தில் தொடர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதன் பின்னர் உயர்நீதிமன்றம் மீண்டும் 3 மாதம் கால அவகாசம் அளித்தது.இந்நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் வசம் உள்ள நடிகை பலாத்காரம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை மீண்டும் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரி குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை பலாத்கார வழக்கை தேவையில்லாமல் நீட்டிக்கொண்டு செல்வது நல்லதல்ல என்று போலீசுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். விசாரணையை முடிப்பதற்கு குறிப்பிட்ட காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் விசாரணை நீண்டு கொண்டே செல்கிறது. இது போலீஸ் உள்பட பலரையும் பாதிக்கும் என்று நீதிபதி மேலும் கூறினார்.