கொல்கத்தா: இறைதூதர் முகமது நபிகள் குறித்து சர்ச்சையாக பேசிய நுபுர் சர்மாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது மேற்குவங்க காவல்துறை.
டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இறைதூதர் முகமது நபிகள் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று நுபுர் சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனு மீதான விசாரணை நேற்றுமுன்தினம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த், நுபுர் சர்மாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அதில், “நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார். உதய்பூரில் நடந்த கொலைக்கு நுபுர் சர்மாவின் பொறுப்பற்ற பேச்சுதான் காரணம். அவரது செயல்பாடுகளால் நாட்டில் இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
அவரது தொலைக்காட்சி விவாதம் கண்டனத்துக்குரியது. நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அது தொடர்பாக நுபுர் சர்மா எப்படி வெளியில் பேச முடியும்?. ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் நுபுர் சர்மா முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். தொலைக்காட்சியில் நேரில் தோன்றி அவர் மன்னிப்பு கேட்பதுதான் நல்லது” என்று கடுமையாக பேசியிருந்தனர்.
இதனிடையே, நுபுர் ஷர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. முகமது நபிகள் பற்றி சர்ச்சைப் பேச்சுக்கு காரணமாக அவர் மீது இரண்டு வழக்குகள் கொல்கத்தா காவல்துறையில் பதியப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் நார்கெல்டங்கா காவல் நிலையத்திலும், ஆம்ஹெர்ஸ்ட் காவல் நிலையத்திலும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி நான்கு முறை சம்மன் அனுப்பியது கொல்கத்தா போலீஸ். ஆனால், நான்கு முறையும் ஆஜராகத் தவறியதால் தற்போது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஒருநாளுக்குப் பிறகு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு நபருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால், அவர் வெளிநாடுகளுக்கு செல்வது தடுத்து நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.