தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். இதன்படி, இலங்கைத் தமிழர்கள் 104 பேர் மற்றும் நைஜீரியா, பல்கேரியா, வங்கதேசம், இந்தோனீசியா உட்பட வெளிநாட்டினர் மொத்தம் 145 பேர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் உள்ளனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் இவர்களை வெளியில் விடாமல் இன்றுவரை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவார்கள். சிறப்பு முகாமிற்குள் சமைத்து உண்ணும் வசதி, செல்போன் பயன்படுத்திக் கொள்வது உள்ளிட்டவை அனுமதிக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழர்களுக்கு தினசரி உணவுப் படியும் வழங்கப்படுகிறது. கு
றிப்பாக, சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, போலி பாஸ்போர்ட் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமில் உள்ளனர். இப்படி பல ஆண்டுகளாக குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படாமல் சிறப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டிருக்கும் தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் பல்வேறு வகைகளில் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்முகாமில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு இயக்கங்கள் சிறைச்சாலை அருகில் போராட்டம் நடத்தியுள்ளனர். சீமான், அன்புமணி ராமதாஸ், மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த மே மாதம் இறுதியில் இருந்து இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர் இதில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு 10-க்கும் மேற்பட்டோர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் 5 பேர் இருக்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் இலங்கை வாழ் அகதி ஒருவர் தன் உடலில் தீ வைத்துக்கொண்டு தீக்குளிப்பில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் சிறப்பு முகாமில் தங்கியிருப்பவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் காவல் ஆணையர் கார்த்திகேயன், துணை ஆணையர் ஸ்ரீதேவி உள்ளிட்டோரும் முகாம் வாசிகளின் குறைகளை கேட்டறிந்ததோடு மட்டுமல்லாமல் மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று தீர்வு காண்பதாக தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், திருச்சி சிறப்பு முகாமில் உள்ளவர்களில் எவ்வித வழக்குகளும் நிலுவையில் இல்லாத 16 பேரை முதல் கட்டமாக விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பரிந்துரையின் பேரில் சுதர்சன், பிரான்சிஸ் சேவியர், குமார், மகேந்திரன், நிரூபன், நகுலேஷ், சிவசங்கர், பிரேம்குமார், டேவிட், தேவராஜ், திலீபன், கிருபராஜா, எப்சிபன், சவுந்தராஜன், ஸ்டீபன் உள்ளிட்ட 16 பேர்களை விடுதலை செய்ய தமிழக அரசு அனுமதியளித்ததை முன்னிட்டு சிறப்பு முகாமுக்கு வந்த ஆட்சியர் சிறைத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லாத 16 பேரை விடுவிக்க உத்தரவிட்டார்.
முகாம் வாசிகளிடம் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், விடுதலைக்குப் பின்னர், வழக்குகளை தமிழகத்தில் அவரவர் இல்லங்களில் இருந்து சந்திக்க வேண்டும் எனறும், கடந்த காலங்களை சிறை முகாமில் கழித்ததை எண்ணி வருந்தாமல், பாதையை மாற்றி எந்த தப்பான வழிகளுக்கும் செல்லாமல் தத்தம் வாழ்வினைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று விடுதலையானோரின் பெற்றோரிடம் தெரிவித்தார். மேலும் முகாம்வாசிகள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
16 பேர் விடுதலை… முதல்வர், மாவட்ட ஆட்சியருக்கு நன்றி கூறிய இலங்கை தமிழர்கள் #Tamil | #Trichy pic.twitter.com/xgwdKqs9IN
— Indian Express Tamil (@IeTamil) July 2, 2022
இதனை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ள சிறப்பு முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள், கடந்த காலத்தில் இருந்த ஆட்சியர்கள் எங்கள் மீது கருணை காட்டவில்லை என்றும் தற்போது வரப்பெற்றிருக்கும் ஆட்சியர் பிரதீப் குமார் எங்கள் பிரச்சனைகளின் உண்மைத்தன்மையை உணர்ந்து, புரிந்து மத்திய மாநில அதிகாரிகளிடம் கொண்டு சென்று எங்களை விடுவிக்க பெரும் உதவியாக இருந்துள்ளார். அவருக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள் எனத் தெரிவித்தனர்.
மேலும், இந்த முகாமில் மீதமுள்ளவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதனை விரைவில் முடித்து, முகாமில் இருந்த நாட்களை தண்டனை நாட்களாக கருதி அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“