வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத் : பாக்., சிறையில், இந்தியாவைச் சேர்ந்த, 682 பேரும், இந்திய சிறையில், பாகிஸ்தானைச் சேர்ந்த, 461 பேரும் உள்ளதாக, இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.
இந்தியா – பாக்., நாடுகள், எல்லை தாண்டி மீன் பிடிப்போரை பரஸ்பரம் சிறை பிடிக்கின்றன. இது தவிர, வழி தெரியாமல் எல்லை தாண்டுவோரும் கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படுவோர் குறித்த விபரங்களை இரு நாடுகளும், ஆண்டுதோறும் ஜன.,1 மற்றும் ஜூலை 1ல் தெரிவிக்க வேண்டும் என, 2008ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி நேற்று பாக்., வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நாட்டு சிறைகளில் இந்தியாவைச் சேர்ந்த, 682 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மீனவர்கள் 633 பேர், சாதாரண மக்கள் 49 பேர் உள்ளனர்.
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய சிறைகளில், பாகிஸ்தானைச் சேர்ந்த, 461 பேர் உள்ளனர். இதில், சாதாரண மக்கள் 345 பேர், மீனவர்கள் 116 பேர் உள்ளனர். பாக்., சிறையில் உள்ள 539 பேரின் இந்திய குடியுரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் தண்டனைக் காலம் முடிந்து விட்டதால் விடுதலை செய்யும்படி கோரப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும், 105 மீனவர்கள் உட்பட, 125 பேரை, இந்திய துாதரக அதிகாரிகள் சந்திக்க ஏற்பாடு செய்யும்படி தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement