இஸ்லாமாபாத்தில் கடந்த வியாழனன்று ‘ஆட்சி மாற்றம்’ குறித்த தலைப்பில் நடந்த கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான அயாஸ் அமீர் (73) கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “ராணுவ ஜெனரல்கள் சொத்து வியாபாரிகளாக மாறிவிட்டார்கள். எனவே, முஹம்மது அலி ஜின்னா மற்றும் அல்லாமா இக்பால் ஆகியோரின் உருவப்படங்களை அகற்றிவிட்டு “சொத்து வியாபாரிகளின் படங்களை மாட்டுங்கள்” எனச் சாடினார். இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் கலந்துக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து அயாஸ் அமீரின் பேச்சுகளின் சில பகுதிகள் சமூகவலைதளங்களில் வைரலானது, இந்த நிலையில், நேற்று இரவு லாகூரில் அடையாளம் தெரியாத நபர்களால் அயாஸ் அமீர் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அயாஸ் அமீர், “நேற்று இரவு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தேன்.
அப்போது முகமூடி அணிந்த் அடையாளம் தெரியாத நபர்கள் என்னை காரிலிருந்து வெளியே இழுத்து தாக்கினர். மேலும், எனது பணப்பையையும் பறித்து சென்றுவிட்டனர். மக்கள் திரள தொடங்கியதும் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்” எனக் கூறியுள்ளார். அதைத் தொடந்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “லாகூரில் மூத்த பத்திரிகையாளர் அயாஸ் அமீருக்கு எதிரான வன்முறையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் குடிமக்கள் மீது வன்முறை மற்றும் போலி எப்ஐஆர்கள் போடுவதின் மூலம் பாகிஸ்தான் மிக மோசமான பாசிசத்தில் இறங்குகிறது. அரசு அனைத்து தார்மீக அதிகாரத்தையும் இழந்து வன்முறையில் ஈடுபடுகிறது” எனப் பதிவிட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர் அமைப்புகள் மற்றும் உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.