திருமலை: திருமலையில் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பக்தர்கள் தரிசனம் மற்றும் பிரசாதங்கள் பெற எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஆண்டுக்கு ₹500 கோடி தேவஸ்தானத்திற்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் மற்றும் பிரசாதம் எளிதாக கிடைப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்குப் பிறகு பக்தர்கள் அதிக அளவு முக்கியத்துவம் தருவது லட்டு பிரசாதம் பெறுவதற்கு தான். இதனை இடைத்தரகர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டனர். ஏழுமலையான் ேகாயிலில் 2004ம் ஆண்டுக்கு முன் லட்டு பிரசாதம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வரை மட்டுமே தயாரிக்கப்பட்டது. இதனால், பக்தர்கள் கூடுதல் லட்டுகள் கிடைக்காததால் இடைத்தரகர்களை நாடி வந்தனர். லட்டு உற்பத்தி குறைவு என்பதால் அதிகாரிகள் சிபாரிசு கடிதம் மூலம் ₹25க்கு கூடுதல் லட்டு வழங்கப்பட்டு வந்தது. இதனை இடைத்தரகர்கள் பக்தர்களுக்கு தலா ₹50க்கு விற்று வந்தனர். 2004ல் பூந்தி தயாரிக்கும் மையம் கோயிலுக்கு வெளியே புதிய கட்டிடத்தில் மாற்றப்பட்ட பிறகு தேவஸ்தானத்தில் லட்டு உற்பத்தியை அதிகரித்தது. இதனால், தினந்தோறும் 3 முதல் 5 லட்சம் லட்டுகள் தயாரிக்க முடிகிறது. பக்தர்களுக்கு இலவச தரிசனம் உள்ளிட்ட எந்த கட்டண தரிசனத்தில் வந்தாலும் ஒரு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டுகள் தேவையென்றால் ₹50 செலுத்தினால் கூடுதல் லட்டுகள் பெறும் விதமாக செய்யப்பட்டுள்ளது. இதனால் லட்டு பிரசாதம் கள்ள சந்தையில் விற்பனை செய்தது தடைபட்டது. இதனால் ஒரு ஆண்டுக்கு இடைத்தரகர்களுக்கு சென்று வந்த ₹250 கோடி பணம் நேரடியாக தேவஸ்தான கருவூலத்துக்கு கிடைத்து வருகிறது. இதேபோல் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்களும் கள்ள சந்தையில் விற்பனை செய்வதை தேவஸ்தானம் தடுத்துள்ளது. முன்பெல்லாம் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதத்தில் ஒதுக்கப்படும் விஐபி தரிசன டிக்கெட்டுகளை பக்தர்கள் கூட்டம் மற்றும் தேவைக்கு ஏற்ப இடைத்தரகர்கள் ₹5 ஆயிரம் முதல் ₹15 ஆயிரம் வரை விற்பனை செய்து வந்தனர். இதனால், பக்தர்களின் பாக்கெட்டுகள் காலியாகி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்து மத பிரச்சாரத்தின் ஒரு பாகமாக பி.சி, எஸ்.சி, எஸ்.டி பகுதிகளில் புதியதாக கோயில் கட்டவும், பழமை வாய்ந்த கோயில்கள் புனரமைப்பு செய்யவும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளைக்கு பக்தர்கள் ₹10 ஆயிரம் நன்கொடை அளித்தால் எந்தவித முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்கள் இல்லாமல் நேரடியாக விஐபி தரிசன டிக்கெட் ₹500க்கு வழங்கப்படும் என 2019ம் ஆண்டு அக்டோபரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் பக்தர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்மூலம் முதல் ஆண்டில் ₹57 கோடியும், 2020ல் ₹76 கோடியும், 2021-ல் ₹217 கோடியும் நன்கொடையாக தேவஸ்தானம் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு கிடைத்தது. இந்த ஆண்டு ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு மாதம் ₹20 கோடியும் ஆண்டுக்கு ₹250 கோடி வரை வருமானம் கிடைக்கும் விதமாக அமைந்துள்ளது. இதன்மூலம் தரிசனம் மற்றும் பிரசாதங்கள் விற்பனையில் இடைத்தரகர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதோடு மறுபுறம் பக்தர்களின் பணம் நேரடியாக தேவஸ்தானத்தின் கருவூலத்திற்கு வந்து சேருகிறது. ஒட்டுமொத்தமாக, இடைத்தரகர் முறையை மாற்றியதால் திருமலை- திருப்பதி தேவஸ்தான நடவடிக்கையின் மூலம் ஆண்டுக்கு ₹500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது.காலை முதல் மாலை வரை தரிசனம்: உதய, அஸ்தமன சேவா டிக்கெட் பெற்றவர்கள் ஏழுமலையான் கோயிலில் காலை சுப்ரபாதம் முதல் மாலை சகஸ்ர தீப அலங்கார சேவை வரை நடைபெறும் அனைத்து உற்சவங்களிலும் குடும்பத்தினருடன் பங்கேற்கலாம். ஆண்டுக்கு ஒருமுறை என 25 ஆண்டுகளுக்கு இந்த தரிசனம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.உதய, அஸ்தமன சேவா டிக்கெட்டுகள்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1982ம் ஆண்டு உதய, அஸ்தமன சேவா (காலை முதல் மாலை வரை தரிசனம்) டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி அதற்கான டிக்கெட் ₹1 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த டிக்கெட்டில் 25 ஆண்டுகளுக்கு அந்த குடும்பத்தினர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த டிக்கெட் விலை 2006ம் ஆண்டு ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டது.தற்போது அடுத்த 25 ஆண்டுகளுக்கு தரிசனம் செய்ய 531 டிக்கெட்டுகளுக்கு வெள்ளிக்கிழமை அபிேஷகம் நடைபெறும் என்பதால் அன்றைய தினம் மட்டும் ₹1.50 கோடி நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை தரிசனம் செய்ய அனுமதிக்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்தது. இதேபோன்று வெள்ளிக்கிழமை தவிர்த்த மற்ற நாட்களுக்கு ₹1 கோடி நன்கொடை வழங்குபவர்களுக்கு உதய, அஸ்தமன திட்டத்தில் தரிசனம் செய்ய 25 ஆண்டுகளுக்கு அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவித்த 6 மாதங்களில் இதுவரை ₹150 கோடிக்கு மேல் பக்தர்கள் நன்கொடை வழங்கி டிக்கெட்டுகள் பெற்றுள்ளனர். இந்த நிலையில் பக்தர்களின் இந்த நன்கொடையை பயன்படுத்தி திருப்பதியில் குழந்தைகளுக்காக இலவச மருத்துவமனை ₹500 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் முதல்வர் ஜெகன்மோகன் இந்த திட்ட பணியை தொடங்கி வைத்தார். தற்போது குழந்தைகள் மருத்துவமனை கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மொத்தம் உள்ள 531 டிக்கெட்டுகள் மூலம் ₹600 கோடி நன்கொடை திரட்ட தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இன்னும் 6 மாதங்களில் மீதமுள்ள டிக்கெட்டுகளையும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாகவும் அல்லது நேரடியாகவோ பெற்றுக்கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.இந்த ஆண்டுக்குள் மீதமுள்ள டிக்கெட்டுகளையும் வெளியிட்டு நிதி திரட்ட தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலவச குழந்தைகள் மருத்துவமனைக்கான கட்டிட பணிகளை ஓராண்டுக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.