திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள பாண்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். தனியார் பேருந்து ஓட்டுநரான இவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவரை ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில், முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர் போலீஸார்.
இதனிடையே சிறை தண்டனை அனுபவித்து வந்த முருகன், கடந்த மாதம் 22-ம் தேதி ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். இவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள், இவர் ஜாமீனில் வெளியில் வந்திருப்பதை கண்டு அதீத கோபம் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில், வீட்டின் பின்புறம் உள்ள தைலமர தோட்டத்திற்கு முருகன் இயற்கை உபாதைக்காக சென்றுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த சிலர், முருகனை பயங்கர ஆயுதங்களால் சராமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில், செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து முருகனின் மனைவி தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்ற காவல்துறை அதிகாரிகள், முருகனின் கொலை சம்பவத்திற்கு காரணமாக கருதப்படும் தணிகைமலை, தேவிகா, வேல்முருகன், சுரேஷ், விக்னேஷ் என்ற 5 பேர் மீதும் வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்விரோதம் காரணமாக, இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.