மக்களிடம் நுபுர் மன்னிப்பு கேட்கவேண்டும் – உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி: இஸ்லாமியர்களின் இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து தவறாகப் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இறைதூதர் முகமது நபிகள் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று நுபுர் சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த், நுபுர் சர்மாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார். உதய்பூரில் நடந்த கொலைக்கு நுபுர் சர்மாவின் பொறுப்பற்ற பேச்சுதான் காரணம். அவரது செயல்பாடுகளால் நாட்டில் இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அவரது தொலைக்காட்சி விவாதம் கண்டனத்துக்குரியது. நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அது தொடர்பாக நுபுர் சர்மா எப்படி வெளியில் பேச முடியும்?

அவர் பொறுப்பற்ற முறையில் பேசியதால் நாட்டுக்கு மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?

ஜனநாயகம் எல்லோருக்கும் பேச்சுரிமையை வழங்கியுள்ளது. ஆனால் அந்த உரிமையை தவறாக பயன்படுத்தக் கூடாது. நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நுபுர் பேசியுள்ளார். ஜனநாயக வரம்பை மீற இந்த நீதிமன்றம் அனுமதிக்காது. சர்ச்சை ஏற்பட்டதும் அவர் தனது கருத்துக்களை திரும்ப பெறுவதாக சொல்வது மிக மிக தாமதமான முடிவாகும். நாட்டு மக்களின் உணர்வை நூபுர் சர்மா பொருட்படுத்தாமல் புறம் தள்ளியுள்ளார். இதற்கு தீர்வு காணப்பட வேண்டும். ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் நுபுர் சர்மா முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். தொலைக்காட்சியில் நேரில் தோன்றி அவர் மன்னிப்பு கேட்பதுதான் நல்லது.

மேலும் தாம் பேசியதால் ஏற்படும் எதிர்விளைவுகளை பற்றி சிறிதும் யோசிக்காமல் பேசியிருக்கிறார் நுபுர் சர்மா. ஆகையால் அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற கோரும் நுபுர் சர்மா மனு நிராகரிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.