விபத்து மற்றும் பருவ நிலை மாற்றங்களால் ரயில்வே மின் பாதைகளில் பழுது ஏற்படுவது ஒரு பக்கமென்றால், பறவைகள் கூடு கட்டுவதாலும் மின் தடை ஏற்படும் என்கிறார்கள் ரயில்வே மின் பாதை பராமரிப்பாளர்கள்.
ரயில்வே மின் பாதைகளில் கூடு கட்டுவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைப்படும் சூழலைத் தடுக்க 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் ரயில்வே மின் பாதை பராமரிப்பாளர்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய மதுரை ரயில்வே கோட்ட ஊடகத் தொடர்பாளர், “தெற்கு ரயில்வேயில் 5,087 கி.மீ நீளமுள்ள பாதையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 83 சதவிகித அளவுக்கு, அதாவது 4,204 கி.மீ தூரம் வரை ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டுள்ளது.
இந்த மின் பாதைகளை ரயில்வே மின் பாதை பிரிவு பராமரிக்கிறது. தங்கு தடையின்றி ரயில்கள் இயங்க மின்சாரம் வழங்குவதை உறுதி செய்கிறது.
மின் இன்ஜின்களை இயக்க 25,000 வோல்ட் மின்சாரம் வழங்குவதற்குத் தேவையான உப மின் நிலையங்களைப் பராமரிப்பதும் இந்தப் பிரிவின் வேலையாகும்.
மின் பாதை பராமரிப்பிற்காக டவர் வேகன் என்னும் ரயில் பாதையில் இயங்கும் சிறிய ரயில் பெட்டியைப் பயன்படுத்துகிறார்கள். கோட்ட அலுவலகத்திலுள்ள ‘மின் பாதை கட்டுப்பாட்டு அறை’யிலிருந்து மின் பாதைகளின் செயல்பாடு கண்காணிக்கப்படுகிறது.
தொலை தூரத்தில் மின் பழுது ஏற்பட்ட இடத்தைக் கண்டுபிடிப்பது, பழுதுள்ள இடத்தில் மின்சாரத்தைத் துண்டிப்பது போன்ற பணிகள் கோட்ட கட்டுப்பாட்டு அறையிலிருந்துதான் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், மின் பாதையில் பறவைகள் கூடு கட்டுவது வழக்கம். இதனால் பழுது ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. தினமும் ரயில் பாதையில் நடந்து செல்லும் லைன்மேன்கள் பறவைக் கூடுகளைக் கவனமாக அகற்றி மின் பாதை பழுதைத் தவிர்த்து வருகிறார்கள்.
விபத்து மற்றும் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் மின் பாதை பழுதுகளை உடனுக்குடன் சென்று சரி செய்து ரயில் போக்குவரத்து தாமதம் இல்லாமல் செயல்பட உதவுகிறார்கள்” என்றார்.
இயற்கையில் அமைந்த தங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டதால் கூடு கட்ட இடமில்லாமல் அதிக சக்தி கொண்ட மின்சார பாதைகளில் கூடு கட்டி வாழ்வா சாவா என்ற நிலைக்குப் பறவைகள் தள்ளப்பட்டிருக்கின்றன.