'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' – புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனக் கூறி தொடர்புகொண்டு பேசுபவர்கள் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டுமென சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

சமீப காலமாக சைபர் கிரைம் குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புது யுக்தியை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு தங்கள் வீட்டின் மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும் என்றும், சென்ற மாத பில் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை எனவும் உடனே மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு மொபைல் எண்ணையும் சேர்த்து குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

image
இதனை நம்பி தொடர்பு கொள்ளும் பொதுமக்களிடம், வங்கிக் கணக்கு விவரங்களை பெற்று அவர்களது அக்கவுண்டிலிருந்து பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலியான அழைப்புகளையும், குறுஞ்செய்தியையும் நம்பி ஏமாற வேண்டாம் எனவும், அந்த செல்போன் எண்களை தொடர்புகொள்ள வேண்டாம் எனவும் சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
மேலும், மின்வாரியத்தில் இருந்து இது போன்ற குறுஞ்செய்திகளோ, செல்போன் அழைப்புகளோ வராது என்பதால் அனைவரும் கவனமுடன் இருக்குமாறும் பொதுமக்களை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.