சென்னை: மெட்ரோ ரயில் பணிகளுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்குச் சொந்தமான ராஜ் கமல் நிறுவனத்தின் நிலம் எடுக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மொத்தம் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 4-வது வழித்தடம் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையில் அமையவுள்ளது. இந்த வழித்தடம் கலங்கரை விளக்கத்தில் தொடங்கி ஆழ்வார்பேட்டை, நந்தனம், கோடம்பாக்கம், வடபழனி, போரூர் வழியாக மொத்தம் 30 நிலையங்கள் அமையவுள்ளன.
இதில் பாரதிதாசன் சாலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு தேவையான நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சாலையில் நடிகர் கமல்ஹாசனுக்குச் சொந்தமான ராஜ் கமல் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் நுழைவாயில் அருகில் சாலை அளக்கப்படும் பணியை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. இந்நிலையில், ராஜ் கமல் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான 10 அடி இடத்தை எடுத்துக் கொள்ளப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்படுள்ளது. இந்த அறிவிப்பின்படி எடுக்கப்படும் நிலங்களுக்கு மெட்ரோ ரயில் சார்பில் உரிய இழப்பீட்டு தொகையும் வழங்கப்படும்.