மாஸ்கோ:ரஷ்யாவில் அரசு கட்டடத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா அரசு கட்டடங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசுவது அதிகரித்து வருகிறது.நேற்று ரஷ்யாவில், நிஸ்னி நோவ்கோராட் நகரில் உள்ள மத்திய பாதுகாப்பு சேவைகள் கட்டடம் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பியோடினார்.
‘தீப்பற்றிய பெட்ரோல் பாட்டில் கட்டடத்திற்குள் விழுந்த போதும் பாதிப்பு ஏற்படவில்லை’ என, ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம், பெல்கோராட் நகரில் ராணுவ ஆள்சேர்ப்பு கட்டடத்தில் இதேபோல பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
மேலும், தலைநகர் மாஸ்கோவில் இருந்து, 700 கி.மீ., தொலைவில், பெர்ம் நகரில் உள்ள ராணுவ அலுவலக கட்டடத்திலும் கடந்த வாரம் நான்கு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. எனினும் அவற்றால் தீ விபத்து ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசுவோர் விரைவில் பிடிபடுவர் என, ரஷ்ய போலீசார் தெரிவித்துள்ளனர்.
Advertisement