வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்-விவசாயிகளுக்கு இந்தியா அதிக மானியம் அளிப்பதை தடுத்து நிறுத்த, உலக வர்த்தக அமைப்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, எம்.பி.,க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.அமெரிக்க பார்லிமென்ட் எம்.பி.,க்கள் டிரேசி மான், ரிக் கிராபோர்டு உட்பட, 12 எம்.பி.,க்கள், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அதில் கூறியுள்ளதாவது:உலக வர்த்தக அமைப்பு விதிகளின்படி, எந்த ஒரு நாடும் தன் நாட்டில் விவசாயிகள் செய்யும் உற்பத்தியில், 10 சதவீதத்துக்கு மட்டுமே மானியம் வழங்க வேண்டும். ஆனால், இந்தியா, நெல், கோதுமை உட்பட பல விவசாய உற்பத்தி பொருட்களுக்காக விவசாயிகளுக்கு, 50 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது.இது தொடர்பாக பல முறை முறையிட்டும், தன் நிலைப்பாட்டில் இருந்து இந்தியா மாற மறுக்கிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால், சர்வதேச அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. சர்வதேச அளவில், விவசாயப் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.
இதனால், அமெரிக்க விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர். எனவே, இந்தியாவின் இந்த ஆபத்தான வர்த்தக நடைமுறைக்கு எதிராக, உலக வர்த்தக அமைப்பில் விவாதிக்க அமெரிக்கா வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த பிரச்னை தொடர்பாக அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், இந்திய விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மானியத்தை குறைக்க முடியாது என்ற தன் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதற்காக இந்தியாவுக்கு பல நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.
Advertisement