புதுடில்லி,-ஆட்சேபகரமான மற்றும் மத மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலை தளத்தில் பதிவிட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சமூக ஊடக பத்திரிகையாளர் முகமது சுபைர் மீது, சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.குஜராத்தின் ஆமதாபாதை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது, ‘ஆல்ட் நியூட்’ என்ற பொய் செய்திகளை கண்டறியும் இணையதளம். இதன் துணை நிறுவனரான, முகமது சுபைர், 2018ல் ஆட்சேபகரமான மற்றும் மத மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலை தளத்தில் பதிவிட்டதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டு நன்கொடை
இந்த வழக்கில் போலீஸ் காவல் முடிந்ததால், புதுடில்லி போலீசார் அவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இந்நிலையில், முகமது சுபைர் மீது, சதி திட்டம் தீட்டியது, ஆதாரங்களை மறைத்தது போன்ற சட்டப் பிரிவுகளிலும், வெளிநாட்டு நன்கொடை கட்டுப்பாட்டு சட்டத்தை மீறியதாகவும் புதிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து டில்லி போலீசார் கூறியுள்ளதாவது:ஆல்ட் நியூஸ் நிறுவனத்தை நடத்தும் ‘பிராவ்டா மீடியா’ என்ற நிறுவனத்துக்கு இணைய வழியில், பல வெளிநாடுகளில் இருந்து, 2.31 லட்சம் ரூபாய்க்கும் மேல் கிடைத்து உள்ளது. இது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் எதற்காக பிராவ்டா மீடியா கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.அதேபோல், சமூக வலை தளத்தில் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளோரில் பெரும்பாலானோர், நம் அண்டை நாடான பாகிஸ்தான், பல்வேறு மேற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.இவ்வாறு, புதுடில்லி போலீசார் கூறியுள்ளனர்.
ஜாமின் மறுப்பு
இதற்கிடையே ஜாமின் கேட்டு முகமது சுபைர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை, நேற்று புதுடில்லி தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்தது. அவருக்கு ஜாமின் மறுத்த நீதிமன்றம், 14 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
Advertisement