குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு இன்று தமிழகத்தில் அரசியல் கட்சியினரிடையே ஆதரவு திரட்டினார். இந்த விழாவில் ஒ.பி.எஸ். இ.பி.எஸ் இடையே மோதல் வெளிப்படையாக தெரிந்தது.
இந்தியாவில் விரைவில் குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, மற்றும் எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இந்த தேர்தலுக்காக இருவரும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆதரவு கோரி வருகின்றனர்.
அந்த வகையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு இன்று தமிழகத்தில் ஆதரவு சேகரிப்பில் ஈடுபட்டார். சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் ஹொட்டலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல் கட்டமாக அதிமுகவிடம் ஆதரவு கோரிய திரௌபதி முர்மு தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் பாமக, பாஜக, தேமுதிக, தமாக, புதிய நீதி கட்சி மற்றும் புரட்சி பாரதம் உள்ளிட்ட கடசிகளிடம் ஆதரவு கோரினார்.
இந்த நிகழ்ச்சிக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் என்ற பெயரில் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவருக்கும் பரிக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இருவரும் தனித்தனியாக ஹோட்டலுக்கு வந்த நிலையில், யார் முதலில் மேடை ஏறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதில் வழக்கம்போல் எடப்பாடி பழனிச்சாமி முதலில் மேடை ஏறி திரௌபதி முர்முவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் பழங்குடியின பெண்ணான திரௌபதி முர்முவை முதல்வர் ஸ்டாலின் ஆதரிக்கவில்லை. இதன் மூலம் சமூக நீதி என முதல்வர் மக்களை ஏமாற்றி வருவது வெட்ட வெளிச்சாமாகியுள்ளது என்று கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி பேசுமமபோது ஹோட்டலில் தனி அறையில் இருந்த ஒ.பன்னீர்செல்வம், பழனிச்சாமி அங்கிருந்து புறப்பட்டதை தொடர்ந்து மேடைக்கு வந்தார். தொடர்ந்து திரௌதி முர்முவுக்கு தனது ஆதரவை தெரிவித்த ஒ.பன்னீர்செல்வம், அதிமுக சட்டவிதிகளின் படி இன்றுவரை நான் தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து திரௌபதி முர்முவை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி முர்மு வெற்றிபெற வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும், சமூக நீதி குறித்து பேசுபவர்களும் திரௌபதி முர்முவை ஆதரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தற்போது அதிமுக கூட்டணியில், அதிமுக 66, பாமக 5 பாஜக 4 என 75 சட்டமன்ற உறுப்பினர்களும், 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“