வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐதராபாத்: ஐதராபாத்தில் நடக்கும் பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வரும் பிரதமர் மோடியை வரவேற்க, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் செல்ல மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு, சந்திரசேகர ராவ் தவிர்ப்பது இது 3வது முறையாகும். அதேநேரத்தில், இன்று எதிர்க்கட்சிகளின் சார்பில் களமிறங்கியுள்ள யஷ்வந்த் சின்ஹாவை நேரில் சென்று வரவேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
பா.ஜ.,வை கடுமையாக எதிர்த்து வரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அக்கட்சிக்கு எதிராக மாநில கட்சிகளை அணி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால், பிரதமர் மோடி, ஐதராபாத் வரும் போது அவரை நேரில் வரவேற்பதை சந்திர சேகர ராவ் தவிர்த்து விடுகிறார். கடந்த மே மாதம், இந்திய வணிக மேலாண்மை நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மோடி வந்த போது, வரறே்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக சந்திரசேகர ராவ் பெங்களூரு சென்று விட்டார். முன்னர், பிப் மாதம் மோடி வந்த போதும், சந்திரசேகர ராவ் நேரில் வரவேற்கவில்லை. மாறாக அமைச்சர்கள் மட்டுமே வரவேற்றனர்.
இந்நிலையில், ஐதராபாத்தில் இரண்டு நாள் பா.ஜ., செயற்குழு கூட்டம் இன்று துவங்குகிறது. இதில், பங்கேற்கும் மோடி, நாளை நிர்வாகிகள் மத்தியில் உரையாற்ற உள்ளார். இதற்காக ஐதராபாத் வரும் மோடியை சந்திரசேகர ராவ் நேரில் வரவேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர்கள் மட்டும் மோடியை வரவேற்பார்கள் என தெரிகிறது. மாறாக, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கேட்டு வருகை தரும் யஷ்வந்த் சின்ஹாவை அவர் நேரில் சென்று வரவேற்க உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement