அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். அதே சமயத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு, அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக இன்று சென்னை வந்துள்ளார்.
தனியார் ஓட்டல் ஒன்றில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்பிகள், எம்எல்ஏக்களை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டுகிறார்.
இந்த சிறப்பு கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவருமே கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி முதலில் மேடை ஏறி, திரவுபதி முர்முவுக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வாழ்த்துரையாற்றினார்.
பின்னர் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மேடை ஏறி தங்களது தனது ஆதரவை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம், “அதிமுகவின் சட்ட விதிமுறைகளின் படி, தற்போது வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான்” என்று தெரிவித்தார்.
அப்போது செய்தியில் மேலும் சில கேள்விகளை எழுப்பினர். ஆனால், அதனை தவிர்த்து விட்டு ஓ பன்னீர்செல்வம் புறப்பட்டார்.