சாதாரண காய்ச்சலும், ஜலதோஷமும் அடுத்தடுத்த நாள்களில் கொரோனாவாக மாற வாய்ப்புண்டா? இரண்டையும் எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது? காய்ச்சல், சளி வந்தால் ஆன்டிபயாக மருந்து எடுத்துக்கொள்ள வேண்டுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.
காய்ச்சல், ஜலதோஷம், உடல்வலி போன்றவை கொரோனா பாதிப்பின் ஆரம்பகால அறிகுறிகளாக இருக்கலாம். சாதாரண சளி, காய்ச்சல் கொரோனாவாக மாற வாய்ப்புகள் மிகக்குறைவு.
கொரோனாவுக்கும் சரி, சாதாரண சளி, காய்ச்சலுக்கும் சரி, கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அறிகுறிகள்தான் ஆரம்பத்தில் தென்படும்.
இது கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் காலம் என்பதால் உங்களுக்கு ஏற்படும் காய்ச்சல், சளி, உடல்வலி போன்ற அறிகுறிகள் மூன்று நாள்களுக்கும் மேல் தொடர்ந்தால், கோவிட் பரிசோதனை செய்து தொற்று பாதிப்புள்ளதா இல்லையா என்று உறுதிசெய்துகொள்ளலாம்.
மற்றபடி இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க வேறு பரிசோதனைகள் இல்லை.
கொரோனா உள்ளிட்ட சில தொற்றுகள் வைரஸ் பாதிப்பால் வருபவை. எந்தவகையான தொற்று என்பது தெரிந்தால் அதற்கேற்ப மருத்துவர் மருந்துகளைப் பரிந்துரைப்பார். அதாவது, வைரஸ் தொற்று என உறுதியானால் ஆன்டிவைரல் மருந்துகளைப் பரிந்துரைப்பார்.
அதற்கு மேல் பாக்டீரியா தொற்று இருப்பது உறுதியானால் அதற்காக ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.
கொரோனா தொற்றுக்காக ஆன்டிவைரல் மருந்துகள் உள்ளன. அவையும் எல்லோருக்கும் தேவைப்படாது. மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு தேவையறிந்து பரிந்துரைப்பார். எல்லா வகையான சளி, காய்ச்சல் பாதிப்புக்கும் ஒரே மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை.
எனவே, மருத்துவரின் ஆலோசனையின்றி நீங்களாக சுய சிகிச்சை எடுத்துக்கொள்வது சரியல்ல.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.