எலக்ட்ரிக் வாகனங்களுக்காக நடத்தப்படும் ABB FIA Formula E சாம்பியன்ஷிப் போட்டிகள் உலகின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தொடரின் 9-வது சீஸன் ரேஸ் ஒன்றை இந்தியாவில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது ஃபார்முலா அமைப்பு. 13 நகரங்களில் 18 பந்தயங்களாக நடைபெறும் இத்தொடரின் நான்காவது ரேஸை நடத்த ஹைதராபாத் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரை நடைபெறும் இத்தொடரில் மகேந்திரா ரேசிங், டாடாவின் ஜாக்குவார் ஆகிய இரண்டு இந்திய அணிகள் கலந்துகொள்கின்றன. இந்த சீஸனில் புதிய ஜென் 3 எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரையிலான ஃபார்முலா கார்களில் வலிமை மிக்க செயல்திறன் கொண்டதாக இக்காரே விளங்குகிறது.
இது குறித்து பார்முலாவின் இணை இயக்குநரான ஆல்பர்டோ லாங்கோ கூறுகையில், “ABB FIA Formula E-வின் 9-வது சீஸனிற்காகத் தேதிகளை தற்போது அறிவித்துவிட்டோம். இது வரையிலான ஃபார்முலா இ போட்டிகளில் இதுதான் அதிக செலவில் நடைபெறுகிற போட்டி. ஹைதராபாத், சா பாலோ ஆகிய இரு நகரங்களில் இம்முறைக்கான போட்டிகள் நடைபெறவிருக்கிறன. மேலும் கேப் டவுன் நகரில் இவ்வருடத்திற்கான போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறோம். உலகிலேயே முதல் கார்பன் அற்ற ரேஸ் இதுவே” என்றார் அவர்.
மேலும் ஃபார்முலா E தலைமை அதிகாரி ஜெமி ரெய்கல் பேசுகையில், “மெக்சிகோவில் தொடங்கி லண்டனில் முடிவடையும் இப்போட்டியில் நீண்ட நாள்களுக்குப் பிறகு வருகை புரிந்திருக்கிறது மாசிராட்டி (Maserati). உலக ரசிகர்களிடையே இப்போட்டி பெரும் வரவேற்பை பெரும் என்று நம்புகிறோம். பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஜென் 3 வகை கார்கள் இப்போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதுவும் கார் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.