இங்கு பலரது வீடுகளிலும் பெரும் பிரச்னைகளாக இருப்பது, எறும்புகள். உணவை சாப்பிடுவதில் ஆரம்பித்து நம்மை கடிப்பது வரை விதவிதமான வகைகளில் தொந்தரவு செய்யும் எறும்புகளை வெளியேற்ற பலவிதமான முயற்சிகள் செய்திருப்போம். அவற்றுள் பல பலனளிக்காமலே இருந்திருக்கும்.
ஆனால், வீட்டிலேயே இருக்கும் சில எளிமையான பொருள்களைக் கொண்டே எறும்பை நாம் விரட்டிட முடியும். அதற்கான வழிகளைப் பார்ப்போம்.
1. சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் ஆசிட் நிரம்பிய எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்களை பயன்படுத்துவது எறும்பு தொல்லையில் இருந்து நம்மை காக்க உதவும். இதற்கு, எலுமிச்சை சாற்றை எறும்பு இருக்கும் இடங்களில் தெளிக்க வேண்டும். மற்றும் எலுமிச்சையின் தோலை எறும்பு இருக்கும் இடங்களில் வைப்பதும் நல்ல பலனை தரும். முடிந்தால் வீடு துடைக்கும் போது அந்த நீரில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். இந்த நீரைக் கொண்டு வீடு சுத்தம் செய்யும் போது எறும்புகள் நெருங்கவே நெருங்காது.
அதேபோல, ஆரஞ்சு பழ சாற்றுடன் சிறிது வெந்நீர் சேர்த்து ஸ்பிரே பாட்டிலில் எடுத்துக்கொள்ளவும். அதனை எறும்புகள் மீது ஸ்பிரே செய்தால் கண்டிப்பாக எறும்புகள் அவ்விடம் விட்டு நீங்கிவிடும். முக்கியமாக சமையல் அறையின் மேடையின் மீது இப்படி செய்யலாம்.
2. மிளகு மற்றும் உப்பு
சாதாரண தூள் உப்பை எடுத்து அப்படியே எறும்பு மீது தூவவும். அல்லது வெந்நீரில் அதிகமாக உப்பு சேர்த்து அதனை ஸ்பிரே செய்யவும். இது நல்ல பலனை தரும். சாதாரண தூள் உப்பு போதும், இந்துப்பு போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.
அதேபோல மிளகை பொடி செய்து அத்துடன் தண்ணீர் கலந்து ஸ்பிரே போன்று பயன்படுத்தலாம், அல்லது அப்படியே பொடியாகத் தூவலாம். மிளகின் நெடியும் தன்மையும் எறும்புகளுக்கு சுத்தமாகப் பிடிக்காது என்பதால் சில நிமிடங்களிலேயே நீங்கிவிடும். பின்னர் மிளகை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதை கவனத்தில் கொள்க.
3. பட்டை மற்றும் கிராம்பு
சமையலில் பயன்படுத்தும் பட்டை மற்றும் கிராம்பின் மணம் எறும்புகள் மட்டுமல்லாது, பல பூச்சிகளுக்கும் பிடிப்பதே இல்லை. இவற்றை வீட்டின் வாசலிலோ, மூலையிலோ வைக்கும்போது எறும்புகள் வருவது குறையும். அப்படியே வைக்காமல், இவற்றை பொடி செய்தும் பயன்படுத்தலாம். இந்தப் பொடியை எறும்பின் மீது தூவும்போது எறும்பு குறைவதுடன், வீடு முழுவதும் நறுமணம் பரவும்.
4. புதினா
ஃபிரெஷ்ஷான புதினாவின் நறுமணத்தை எறும்புகளால் தாங்கவே முடியாது. புதினா இருக்கும் இடங்களில் இருந்து எறும்புகள் தள்ளியே இருக்கும். அதனால் எறும்புகளை தூரத்துவதற்கான சிறந்த வழியாக புதினாவை பயன்படுத்தலாம்.
5. எறும்பு சாக்பீஸ்
கால்சியம் கார்பனேட் உள்ள சாக்பீஸை எறும்பு உள்ள இடங்களில் வரையலாம். கூடவே அதனை தூள் செய்து எறும்புகளின் மீது ஸ்பிரே செய்யலாம். ஆனால் குழந்தைகள் அதை தொடாமல் பார்த்துக்கொள்வதில் கவனம் தேவை.
6. வெள்ளை வினிகர்
வினிகர் சில சொட்டு மற்றும் தண்ணீர் சேர்த்து ஸ்பிரே போன்று தயாரித்துக்கொள்ளவும். இவற்றில் சில துளி நல்லெண்ணெய் சேர்த்துக்கொண்டால் கூடுதல் பலன் கிடைக்கும். இந்த கரைசலை எறும்பு உள் நுழையும் எனக் கருதும் இடங்களில் தெளிக்கவும். மீண்டும் அங்கு எறும்புகள் வராது.
மேற்கூறிய முறைகளுடன், உணவு, குறிப்பாக இனிப்பை எறும்புகள் அண்டாத வண்ணம் சேமித்து வைப்பது, புளிப்பு, கசப்பு சுவையுடைய உணவுகளை எறும்பு வரும் இடங்களுக்கு அருகில் வைப்பது போன்றவற்றையும் பின்பற்றலாம்.