வழக்கமான ஹரி டெம்ப்ளேட் படத்துக்குள் சாதிய பிரச்னைகளையும் இணைத்தால் நாலு கால் `யானை’ வந்துவிடும்.
ஊரின் பெரிய தலைக்கட்டு PRV குடும்பம். சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், சஞ்சீவி, அருண் விஜய் என நான்கு மகன்களுடன் கம்பீரமாய் எல்லாவற்றுக்கும் முன்னே நிற்கிறது. ஆனால், மூத்த தாரத்து மகன்கள் ஜாதியே முக்கியம் என முறுக்கிக் கொண்டு நிற்க, இரண்டாம் தாரத்து மகனான அருண் விஜய்யோ மக்களுக்காக முன் நிற்கிறார்.
பக்கத்து ஊரின் ஜெயபாலன் குடும்பத்துக்கும் இவர்களுக்குமான சண்டைக்குப் பின்னால் ஒரு உயிர்ப்பலி நிற்கிறது. சிறைக்குச் சென்ற ஜெயபாலனின் மகன், மீண்டும் ஊர் திரும்பி PRV குடும்பத்தை எப்படிப் பழிவாங்குகிறார்? அதை எப்படி அருண் விஜய் தடுத்து நிறுத்துகிறார் என்பது ‘யானை’யின் கதை. இதோடு பிரியா பவானி சங்கர் காதல், அம்மு அபிராமியின் காதல் எனக் கிளைக்கதைகளைத் தாங்கி நிற்கிறது ‘யானை’யின் மீதிக் கதை.
அதிரடி ஆக்ஷன் படங்களில் அருண் விஜய் ஏற்கெனவே நடித்திருந்தாலும், ஹரி டெம்ளேட் பரபர ஆக்ஷன் களம் அருண் விஜய்க்கு ரொம்பவே புதிது. செருப்பைக் கழற்றிவிட்டு நெற்பயிர்களின் மேல் ஓடுவது; முப்பது பேரை ஒரே இடத்தில் தூக்கியடிப்பது என முறுக்கேறிய உடலுடன் பில்ட் அப் காட்சிகளில் மாஸாக இருக்கிறார் அருண் விஜய்.
தேர்ந்த நடிகர்களுக்கு எல்லோரையும் தூக்கிச் சாப்பிட ஓரிரு காட்சிகளே போதுமானது என்பதை மீண்டும் நிரூபிக்கிறார் ராதிகா. இடைவேளைக்கு முந்தைய காட்சியில் அந்த சீனுக்குள் இருக்கும் எல்லோரையும் ஒரே நொடியில் ஓவர்டேக் செய்கிறார். சாதிவெறி ஊறிப்போன நபராக சமுத்திரக்கனி. அவர் சொல்லும் எல்லாவற்றுக்கும் அப்படியே ஆகட்டும் சொல்லும் சகோதரர்களாக சஞ்சீவ்வும், போஸ் வெங்கட்டும். சாதிவெறி இல்லாத ஆண்களிடம் கூட புரையோடிப் போயிருக்கும் ஆணாதிக்கத்தை ஒரு சண்டையில் துணிச்சலாகக் கேள்வி கேட்கிறார் பிரியா பவானி சங்கர்.
கடந்த சில படங்களாக ஹரி மிஸ் செய்த அவரின் கம்ப்ளீட் பேக்கேஜ் கமர்ஷியல் பார்முலாவை இதில் மீண்டும் கொண்டு வந்திருக்கிறார். ஹரியின் பட வசனங்கள் என்பது எப்போதுமே ரைமிங்காக இருக்கும். இந்தப் படத்திலும் அந்த டச் பல இடங்களில் தெரிகிறது. “ஆடற காலத்துல ஆடிட்டு, அடங்கற காலத்துல அடங்கணும். மடங்கற காலத்துல மடங்காம மடத்தனமா பேசிக்கிட்டு இருக்க” என்பது மாதிரியான ஹரியின் வசனங்கள் மட்டுமே ஒரு கொயர் நோட்டில் எழுதி நிரப்பும் அளவுக்குப் படத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
அதே சமயம், தனி காமெடி டிராக் என்பது சினிமாவில் முற்றிலுமாய் ஒழிந்துவிட்ட பின்னரும் இன்னும் அதை ஏன் ஹரி பிடித்துக்கொண்டிருக்கிறார் எனத் தெரியவில்லை. அப்படி அது நன்றாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரேயொரு காட்சியைத் தவிர மற்ற காமெடி அனைத்தும் டிராஜெடியாகவே இருக்கிறது. ஸ்கிரீனைக் கிழித்துக்கொண்டு யோகி பாபுவும், ‘குக் வித் கோமாளி’ புகழும் நேராக வந்து நம்மைக் கிச்சு கிச்சு மூட்டினால்கூட நாம் கொஞ்சம் சிரிக்க ஏதுவாக இருந்திருக்கும். ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்களும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பின்னணி இசையில் மட்டும் ஆங்காங்கே மிரட்டுகிறார்.
சாதிய, மத ரீதியிலான மசாலா வசனங்களுடன் வறட்டு பெருமைக்காகக் கொம்பு சீவி எடுக்கப்படும் கமர்ஷியல் படங்களின் மத்தியில், சாதி பார்ப்பவர்களை எதிர்மறை கதாபாத்திரங்களாகச் சித்திரித்து, அது தவறு என்பதை ஹரி தெளிவாகச் சொல்லியிருப்பது மிகப்பெரிய ஆறுதல். அதே சமயம், மனம் ஒத்துச் செய்யும் காதல் திருமணங்களுக்குக்கூடப் பெற்றோர் கண்ணீர் என்றெல்லாம் இன்னும் பூசி மெழுகி காட்சிகளை வைத்துக்கொண்டிருக்கிறார். ஜாதிக்கு எதிராக வெளிப்படையாகப் பேசியதைப் போலவே இன்னும் சில ஆண்டுகளில் காதலுக்கு முழு ஆதரவாகவும் இயக்குநர் ஹரி படங்களை இயக்குவார் என நம்பலாம்.
காமெடியையும், பாடல்களையும் மட்டும் பொறுத்துக்கொண்டால் `யானை’ நிச்சயம் ஹரியின் கம்பேக் சினிமாதான்!