புயல் அடித்து ஓய்ந்ததுபோல, ஜூன் 23-ம் தேதிக்கு முன்பாக சுமார் இரண்டு வார காலம் அ.தி.மு.க-வுக்குள் தலைமையைக் கைப்பற்றுவதற்கான யுத்தம் நடந்துமுடிந்திருக்கிறது. பொதுக்குழு முடிந்தும் அந்தப் பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை. இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் என இரண்டு தரப்பிலும் திரைமறைவு மற்றும் வெளிப்படையான மூவ்கள் நடந்துகொண்டே இருக்கிறது.
ஜூலை 11-ம் தேதியாவது இப்பிரச்னை முடிவுக்கு வருமா? என்று அ.தி.மு.க அமைப்புச் செயலாளர்கள் மத்தியில் பேசினோம். “எப்படியாவது பொதுச்செயலாளர் பதவியை ரீடெயின் செய்துவிடலாம் என்று எடப்பாடி பகீரத முயற்சியில் ஈடுபட்டார். பல ஸ்வீட் பாக்ஸ்களை நிர்வாகிகளுக்குக் கொடுத்து, தன் பக்கம் திருப்பிவைத்திருந்தார். ஆனால், ஒரே இரவில் ஓ.பி.எஸ் வழக்கு தொடர்ந்து எல்லாவற்றையும் காலிசெய்துவிட்டார். அந்தக் கோபத்தைதான் பொதுக்குழு மேடையில் பெஞ்சமினிடம் காட்டினார் எடப்பாடி.
அதன்பிறகு, ஓ.பி.எஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு, நீதிமன்ற அவமதிப்பு மனு, ஏற்கெனவே நீதிமன்றம் சென்ற பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தரப்பில் ஜூலை 11 பொதுக்குழுவைத் தடைசெய்ய வலியுறுத்தி மீண்டும் ஒரு மனு, தேர்தல் ஆணையத்தில் இருதரப்பிலும் மனு என மனுக்கள்தான் இங்கும் அங்குமாகப் பறந்துகொண்டிருக்கிறது.
சண்முகம் தாக்கல் செய்த வழக்கில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் பதில் மனுத்தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பன்னீர் தரப்பில், நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்துவிட்டதாகத்தான் பதில் தாக்கல் செய்வார்கள். எடப்பாடி தரப்பில் நிர்வாகிகளும், பொதுக்குழு உறுப்பினர்களும் தங்கள் பக்கம் இருப்பதால், எந்த முடிவையும் எடுக்கக்கூடிய அதிகாரம் இருப்பதாகச் சொல்வார்கள். பதில் மனுத்தாக்கல் செய்தால்தான் அடுத்தக்கட்ட நகர்வே தெரியவரும்.
எனினும், எப்படியும் ஜூலை 11-ல் பொதுக்குழுவைக்கூட்டி மீண்டும் பொதுச்செயலாளர் பதவியைக் கொண்டுவந்து, அதைக்கைப்பற்ற எடப்பாடி சிரத்தை எடுக்கிறார். அதற்காகத்தான், சி.வி.சண்முகத்தை வைத்து ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது என்று சொல்லவைத்தனர்.
அதுமட்டுமின்றி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கிவிட்டு, தலைமை நிலையச் செயலாளர் என எடப்பாடி மாற்றிவிட்டார். மேலும், ‘அன்புள்ள அண்ணன் ஓ.பி.எஸ்-க்கு’ என்று பதில் கடிதம் எழுதியதில், ஏகத்துக்கும் பன்னீரை பஞ்சர் செய்திருக்கிறார் பழனிசாமி.
ஒருவேளை நீதிமன்றம் தடை விதித்தால், ஜூலை 11-ல் பொதுக்குழு கூட வாய்ப்பில்லை. எந்த முக்கிய முடிவுகளும் எடுக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்தால், பொதுச்செயலாளர் பதவியை முன்பு ரத்து செய்வதற்காக விதிகளை திருத்தம் செய்தனர். அந்த விதிகளை மீண்டும் திருத்தம் செய்து, பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவரும் வகையில் தீர்மானம் நிறைவேற்றுவார்கள். ஆனால், அப்போதே அப்பதவி எடப்பாடிக்குத்தான் என்று அறிவிக்க மாட்டார்கள்.
எந்த நிபந்தனையும் விதிக்காமல், பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம் என்று நீதிமன்றம் அனுமதி கொடுத்துவிட்டால், அனேகமாக ஜூலை 11 அன்றேகூட பொதுச்செயலாளராக எடப்பாடியை ஒருமனதாகத் தேர்வுசெய்ததாக அறிவித்துவிடுவார்கள்.
‘தி.மு.க பன்னீர்செல்வத்துக்கு மறைமுக உதவி புரிகிறது’ என்று சி.வி.சண்முகத்தின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதுபோலத் தெரியவில்லை. ஏனெனில், ஓ.பி.எஸ்-க்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தி.மு.க நினைத்திருந்தால் ஜூன் 23 பொதுக்குழுவையே தடுத்து நிறுத்தியிருக்க முடியும். பா.ஜ.க போல தி.மு.க-வும் இருவருக்கும் இடையே என்ன நடக்கிறது என்று வேடிக்கைதான் பார்க்கிறது. தலைவர்கள் இருவரும் அடித்துக்கொண்டால், அது தங்களுக்குச் சாதகம் என்றுதான் தி.மு.க-வும், பா.ஜ.க-வும் நினைக்கிறது. ஒருவேளை ஜூலை 11-ல் எடப்பாடி பொதுச்செயலாளராகிவிட்டால், ஓ.பி.எஸ்-ஸின் நிலை என்னவாகும் என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.
பொதுச்செயலாளருக்கான அதிகாரங்கள் எல்லாம் கைக்கு வந்துவிட்டால், கண்டிப்பாக பன்னீர், அவரது மகன் ரவீந்திரநாத், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரை எடப்பாடி தரப்பு கட்சியைவிட்டே நீக்கவும் வாய்ப்பிருக்கிறது. அப்படியில்லையெனில், மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டு கட்சிக்குள் இருக்கலாம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
தேர்தல் கமிஷனில் மீண்டும் மீண்டும் ஓ.பி.எஸ் முறையிட்டாலும் அவர்களாலும் எதுவும் செய்ய முடியாது என்பதுதான் நிதர்சனம். கட்சியில் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பான்மையாக யாரை ஆதரிக்கிறார்களோ, அவர்களுக்குச் சாதகமாகத்தான் தேர்தல் கமிஷனால் தீர்ப்பு வழங்க முடியும். நீதிமன்றம் ஒருவேளை தேர்தல் கமிஷனுக்குப் பரிந்துரை செய்தால், முடிவுகள் மாறலாம். எல்லாமே நீதிமன்றத் தீர்ப்பைப் பொறுத்துதான் இருக்கிறது!” என்றனர்.