சென்னை: “வரும் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு, அந்த பதவிக்கு எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார்” என்று இபிஎஸ் ஆதரவாளர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பெஞ்சமின், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் நேரில் சென்று இன்று ஆய்வு செய்தனர்
இந்த ஆய்வுக்குப் பின்னர், நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” அதிமுக பொது்ககுழு, செயற்குழு கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளை பார்வையிடுவதற்காக,தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவரும் இங்குவந்து பார்வையிட்டோம். வருகின்ற 11-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டப்படி வெகு சிறப்பாக எழுச்சியோடு நடைபெறும்.
அதேபோல், சட்ட விதிகளுக்குட்பட்டு நடைபெறுகின்ற அந்த பொதுக்குழுவில், கடந்தமுறை பொதுக்குழு நிராகரித்த 23 தீர்மானங்களில், ஒருசில தீர்மானங்களைத் தவிர்த்து, மற்ற தீர்மானங்கள் நடைபெறவிருக்கின்ற பொதுக்குழுவிலே நிறைவேற்றப்படும். குறிப்பாக பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்கி, கட்சியின் அனைத்து அதிகாரங்களையும் படைத்தது பொதுச்செயலாளர் பதவி. மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கு என்னென்ன அதிகாரங்கள் இருந்ததோ, அந்த அனைத்து அதிகாரங்களும் அடங்கிய பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு, அப்பதவிக்கு, முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பொதுக்குழு நடக்காது என்று, ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியிருக்கிறார். அவர் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான தகவலை தெரிவித்துக் கொண்டிருக்கிறார். இந்த பொதுக்குழு சட்டப்படி நடைபெறும். சட்ட விதிகளுக்குட்பட்டு நடைபெறும் பொதுக்குழுவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அத்தனையும் செயல்பாட்டுக்கும் வரும்” என்று அவர் கூறினார்.