வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:அமர்நாத் பனிலிங்க கோவிலுக்கு பக்தர்கள் புனித யாத்திரை செல்லும் வழியில், சேதம் அடைந்த இரண்டு மரப்பாலங்களை, ராணுவ வீரர்கள் ஒரே இரவில் சீர்செய்தனர்.
இமயமலையில், 12 ஆயிரத்து 730 அடி உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்கும் புனித யாத்திரை, கடந்த மாதம் 30ல் துவங்கியது. இந்த புனித யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட இதர பணிகளில், மாவட்ட நிர்வாகத்துக்கு நம் ராணுவம் உதவி வருகிறது. நம் ராணுவத்தின், ’15 கார்ப்ஸ்’ எனப்படும் சினார் வீரர்கள், இந்த பாதுகாப்பு பணிகளுக்கு பொறுப்பேற்று உள்ளனர்.
அமர்நாத் செல்லும் வழியில், பால்டால் பகுதியில், பிரரிமார்க் அருகே அமைந்துள்ள பாலம் நிலச்சரிவு காரணமாக உடைந்தது. பால்டால் வழித்தடத்தில், காளிமாதாவிற்கு அருகில் உள்ள நாலாஸ் என்ற இடத்தில், வெப்பநிலை திடீரென அதிகரித்ததன் விளைவாக, காலமாட்டா என்ற இடத்தில் உள்ள பாலங்கள், கடந்த 30ம் தேதி நள்ளிரவில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
பொங்கி வரும் காட்டாற்று வெள்ளத்தை கடக்க, அந்த மரப்பாலங்கள் தான் ஒரே வழி. எனவே, பக்தர்களின் பயணம் தடைபடாமல் இருக்க, பாலங்களை சரி செய்யும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். சினார் கார்ப்ஸ் படையைச் சேர்ந்த 13 பொறியாளர்கள், சேதம் அடைந்த இரண்டு பாலங்களையும், ஒரே இரவில் சீரமைத்தனர். மோசமான வானிலையை பொருட்படுத்தாமல், மிகக் குறுகிய காலத்தில், இருள் சூழ்ந்த நேரத்தில் மிக நேர்த்தியாக பாலங்களை கட்டி முடித்தனர். இதன் காரணமாக, அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களின் பயணம் தடைபடாமல் தொடர்ந்தது.
Advertisement