ஆலு பராத்தா, பனீர் பாஸ்தா, வெஜிடபுள் ஸ்பெகடி, பாலக் பூரி. வெரைட்டியான வீக் எண்டு ஸ்பெஷல் ரெசிப்பீஸ்!

ஆலு பராத்தா

தேவையானவை:

பராத்தா செய்ய:

கோதுமை மாவு – 250 கிராம்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

ஆலு மேத்தி ஸ்டஃபிங் செய்ய:

உருளைக்கிழங்கு – 2 மீடியம் சைஸ் (வேக வைத்து தோல் உரித்து மசிக்கவும்)
வெந்தயக் கீரை இலைகள் – 75 கிராம்
பச்சை மிளகாய் – 2 அல்லது 3
இஞ்சி – 1 துண்டு
கேரட் – 40 கிராம் (துருவியது)
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – ஒரு சிட்டிகை
எண்ணெய் – 3 டீஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
நெய்/எண்ணெய் – தேவையான அளவு

ஆலு பராத்தா

செய்முறை:

பராத்தா செய்யக் கொடுத்தவற்றை, மிருதுவாகப் பிசைந்து இருபது நிமிடங்களுக்கு, ஒரு துணியால் மூடி வைக்கவும். இனி ஸ்டஃபிங்குக்கு கொடுத்த இஞ்சியை, மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து சீரகத்தைச் சேர்த்து வெடித்ததும், பெருங்காயத்தூள், இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதில் வெந்தய இலைகளைச் சேர்த்து வதக்கி, உப்பு, சர்க்கரை சேர்த்து வதக்கவும். அதில் மசித்த உருளை, மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து சில நிமிடம் நன்கு வதக்கவும். இறுதியாக சீரகத்தூள், துருவிய கேரட், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பை அணைத்து ஆற விடவும். இதை எலுமிச்சை வடிவிலான ஏழு சின்ன உருண்டைகளாக உருட்டி தனியாக வைக்கவும்.

பராத்தா மாவை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இதில் ஓர் உருண்டையை எடுத்து மாவு தூவி வட்டமாக உருட்டி, ஆற வைத்த ஸ்டஃபிங் உருண்டையை எடுத்து வைத்து மாவை மூடவும். பின்னர் மெதுவாக வட்டமாகத் தேய்க்கவும். அதிகமாக அழுத்தித் தேய்க்க வேண்டாம். அடுப்பில் தவாவை வைத்துச் சூடானதும் பராத்தாவைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்து வைக்கவும். இதன் மேல், நெய் அல்லது வெண்ணெயை சிறிது தடவி நான்கு பீஸ்களாக வெட்டி பூந்தி ரைத்தா அல்லது தயிர் உடன் பரிமாறவும்.

பனீர் பாஸ்தா

தேவையானவை:

வேக வைத்த பாஸ்தா – 200 கிராம்
பனீர் – 100 கிராம் (துருவவும், சில பீஸ்களை சிறிதாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கவும்)
கேரட் – 1 பொடியாக நறுக்கவும்)
இஞ்சி – அரை டீஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)
பூண்டு – அரை டீஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)
டொமேட்டோ சாஸ் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
கரம்மசாலாத் தூள் – கால் டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)
எண்ணெய் – 2 டீஸ்பூன்
வெண்ணெய் – 1 டீஸ்பூன் (விரு

பனீர் பாஸ்தா

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், வெண்ணெய் சேர்த்து உருகியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கி, தக்காளி, டொமேட்டோ சாஸ் சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்கவும். இதில் கேரட் சேர்த்து சில நிமிடம் வதக்கி, பின்னர் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வதங்கியதும் பனீர் சேர்த்து சில நிமிடம் வதக்கவும். இதில் இரண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு கலவையை வேக விடவும். வேக வைத்த பாஸ்தாவை இதில் சேர்த்து, தீயைக் குறைத்து எல்லாம் சேர்ந்து வரும்போது கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

வெஜிடபிள் ஸ்பெகட்டி

தேவையானவை:

ஸ்பெகட்டி – 100 கிராம்
(கோதுமை ஸ்பெகட்டி- டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)
பெரிய வெங்காயம் – 1 (ஸ்லைஸ்களாக நறுக்கவும்)
பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற குடமிளகாய் – 40 கிராம் (பெரிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்)
கேரட் – 50 கிராம் (நீளமாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய பூண்டு – 1 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் – சிறிதளவு (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு
சர்க்கரை – கால் டீஸ்பூன்
சோயா சாஸ் – அரை டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
கொத்தமல்லித்தழை – அலங்கரிக்க‌

வெஜிடபிள் ஸ்பெகட்டி

செய்முறை:

ஸ்பெகட்டியை தனியாக வேக வைத்து எடுத்து, குளிர்ந்த நீரில் காட்டி கழுவி, ஈரத்தை வடித்து தனியாக வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து வதக்கவும். இதில் வெங்காயம் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு கிளறி, கேரட் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் கிளறவும். இத்துடன் குடமிளகாய் சேர்த்து சில நிமிடம் வதக்கவும். வேக வைத்த ஸ்பெகட்டி, சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து சில நிமிடம் வதக்கவும். இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும்.

பாலக் பூரி

தேவையானவை:

பாலக்கீரை – 150 கிராம்
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 1
பச்சை மிளகாய் – 2
கோதுமை மாவு – 250 கிராம்
சர்க்கரை – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க‌த் தேவையான அளவு

பாலக் பூரி

செய்முறை:

பாலக்கீரையைக் கழுவி சற்று பெரியதாக நறுக்கவும். வாய் அகன்ற பாத்திரத்தில் கீரை, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடவும். கீரை மிருதுவாகி வெந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடவும். மிக்ஸி ஜாரில் கீரைக் கலவையைச் சேர்த்து மையாக அரைத்து வைக்கவும். கோதுமை, சர்க்கரை, உப்பு, அரைத்த கீரை கலவை சேர்த்துப் பிசையவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். மாவைப் பிசைந்து ஐந்து நிமிடங்கள் தனியாக வைக்கவும். பின்பு, பூரிகளாக பொரித்தெடுக்கவும். இதற்கு ஊறுகாய் அல்லது உருளைக்கிழங்கு மசாலா அருமையாக இருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.