ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 51 இலங்கை அகதிகள் கைது

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பட்டினியை நோக்கி அவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். எனவே அவர்கள் இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவ்வாறு செல்பவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்து வருகிறது.

அந்தவகையில் இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் கடற்படையினர் நேற்று காலையில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மிகப்பெரிய மீன்பிடி படகு ஒன்றில் சிலர் ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்வதை வீரர்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த படகை சுற்றிவளைத்த கடற்படையினர், அதில் இருந்த 51 பேரை கைது செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது இலங்கை கிழக்கு கடற்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஒரு வாரத்தில் நடந்த 4-வது சம்பவம் இதுவாகும். அந்தவகையில் நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 24 பேரையும், கடந்த 27 மற்றும் 28-ந் தேதிகளில் 100-க்கு மேற்பட்டோரையும் கடற்படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.