ஜெருசலேம்,
இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான இயற்கை எரிவாயு கிணறு ஒன்று மத்திய தரைக்கடலில் அமைந்துள்ளது. ஆனால் இந்த எண்ணெய் கிணறு தங்களுக்கு சொந்தமானது என அண்டை நாடான லெபனான் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் நீடிக்கிறது. இந்த நிலையில் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு நேற்று சர்ச்சைக்குரிய அந்த எரிவாயு கிணறு மீது தாக்குதல் நடத்தும் முயற்சியாக 3 ‘டிரோன்’ களை இஸ்ரேல் வான்பரப்புக்கு அனுப்பியது.
எனினும் இதை உடனடியாக தெரிந்துகொண்ட இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மற்றும் கப்பலில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணைகள் மூலம் 3 ‘டிரோன்’ களையும் நடுவானிலேயே இடைமறித்து அழித்தன. இதன் மூலம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.