புதுடெல்லி:உதய்பூர் டெய்லர் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரின் செல்போன் பதிவுகள், இணையதள செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தை சேர்ந்த கன்னையா லால் என்ற டெய்லர், நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால், கொடூரமான முறையில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ரியாஸ் அக்தாரி, கோஸ் முகமது உட்பட 4 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பேரையும் வரும் 12ம் தேதி வரை போலீஸ் காவல் விசாரிக்க என்ஐஏ நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அவர்களை ரகசிய இடத்தில் வைத்து என்ஐஏ விசாரித்து வருகிறது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன்களின் இணையதள பயன்பாட்டு பதிவுகள், இணையதளத்தில் அவர்களின் செயல்பாடுகள் (ஐபிடிஆர்) போன்றவற்றை என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம், ரியாஸ் அக்தாரிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த தாவத்-இ-இஸ்லாமி தீவிரவாத அமைப்புடன் உள்ள தொடர்பு, அவர்களின் எதிர்கால சதி திட்டம் ஆகியவற்றை கண்டுபிடிக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.