புதுடெல்லி: உதய்பூர் தையல்காரர் கன்னையா லால் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது, வரும் 12-ம் தேதி வரை என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது அங்கு கூடியிருந்த பொது மக்களும் வழக்கறிஞர்களும் தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள், “கன்னையா லாலை கொன்றவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர். எனினும் உடனடியாக என்ஐஏ அதிகாரிகள் அந்த 2 பேரையும் அங்கிருந்த வேனில் அழைத்துச் சென்றதால் காயமின்றி தப்பினர்.
கன்னையாவை கொலை செய்ய ரியாஸ் அத்தரி, கவுஸ் தவிர மோசின் மற்றும் ஆசிப் ஆகிய இருவரும் தயாராக இருந்துள்ளது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் கொலை செய்த இருவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்க உதவியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.