ஒற்றைத் தலைமைக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதால் ஓபிஎஸ்ஸை, 11-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் கட்சியை விட்டு நீக்க இபிஎஸ் தரப்பு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் முதல் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், நீதிமன்றத்துக்கு சென்ற ஓபிஎஸ் அதற்க்கு முட்டுக்கட்டை போட்டார்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுபடி, 23-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், ஏற்கெனவே 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது என்று உத்தரவிட்டது. ஆனால், 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட, கட்சியின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை தேர்ந்தெடுக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அவைத் தலைவராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும், வரும் 11-ம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும் என்று தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இதனை முடக்கும் வகையிலும் ஓபிஎஸ் அடுத்தடுத்து நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் முறையீட்டு வருகிறார்.
இந்நிலையில், வரும் 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு ஏன் நீக்கக் கூடாது? என்று எடப்பாடி கே பழனிச்சாமி தரப்பில் ஆலோசனை நடந்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று எடப்பாடி பழனிச்சாமி சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், பி.தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தான் ஓபிஎஸ்.,யை கட்சியை விட்டு நீக்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஓபிஎஸ்.,யை கட்சியை விட்டு நீக்குவதற்கான காரணம் என்று சொல்லடுவது இதுதான், “திமுகவை எதிர்த்தே, எதிர்க்கவே என்ற கொள்கையோடு தொடங்கப்பட்டது அதிமுக. அந்த கொள்கையில் அப்படியே பயணித்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தப்பித்தவறி கூட திமுகவுடன் கழகத்தினர் உறவாடினால் கட்சியை விட்டு துரத்தப்பட்டு வந்தனர்.
ஆனால், ஓபிஎஸ்..
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் வணக்கம் வைக்கிறார்.
கைமாறாக ஓபிஎஸ் போற்றி புகழ்ந்துள்ளார் துரைமுருகன்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி படத் திறப்பு விழாவில், கருணாநிதியை போற்றி புகழ்ந்துள்ளார்.
ஓபிஎஸ் மகன் ஓபிஆர் திமுக ஆட்சியை புகழ்ந்து பாடியுள்ளார்.
கட்சி செயல்பாட்டுக்கு எதிராக ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றுள்ளார்.
இத்தனை காரணங்கள் முன்வைத்து, கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகக் கூறி, கட்சியை விட்டே ஓபிஎஸ் நீக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.