சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானையால் பயணிகள் அச்சமடைந்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடகம் இரு மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இவ்வழியே செல்லும் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை காட்டு யானைகள் அவ்வப்போது வழிமறித்து கரும்புகளை பறித்துத் தின்பது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை தாளவாடியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது தமிழக கர்நாடக எல்லையில் உள்ள வனப்பகுதியில் காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே பேருந்து சென்றபோது அங்கு வந்த காட்டு யானை சாலையின் நடுவே அரசு பேருந்து வழிமறித்து நின்றது.
இதைக் கண்ட ஓட்டுநர் பேருந்தை இயக்காமல் நிறுத்தினார். காட்டு யானை அரசு பேருந்தை வழிமறித்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். சிறிது நேரம் அரசு பேருந்தை வழிமறித்து நின்ற யானை பேருந்து அருகே வந்து பார்த்துவிட்டு பின்னர் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது. இதைத் தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM