யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமியிடம் ராகுல் பேசியதாக வெளியான தகவலை மறுத்துள்ள ஜெய்ராம் ரமேஷ் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை விளைவித்து பலவீனப்படுத்த முயற்சி நடப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவும் தங்களுக்கான ஆதரவைத் திரட்ட அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வருகின்றனர்.
அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை, யஷ்வந்த் சின்ஹா சென்னையில் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். அதைத் தொடர்ந்து, திரௌபதி முர்மு, தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேற்று நேரில் சந்தித்தார்.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குடியரசுத் தலைவர் தேர்தல் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு கேட்டு, எடப்பாடி பழனிசாமியிடம் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசியதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது எனக் கூறியுள்ளார்.
யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமியிடம் ராகுல் பேசியதாக வெளியான தகவலை மறுத்துள்ள ஜெய்ராம் ரமேஷ் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை விளைவித்து பலவீனப்படுத்த முயற்சி நடப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். தங்கள் கூட்டணி வலிமையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM