காரைக்கால்: காரைக்காலில் வயிற்றுப் போக்கால் யாரும் உயிரிழக்கவில்லை என புதுவை அரசு விளக்கமளித்துள்ளது.
காரைக்காலில் வயிற்றுப் போக்கால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, காலரா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதால் பொது சுகாதார அவசர நிலை பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காரைக்காலில் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 2 பேர் உயிரிழந்ததாக இன்று(ஜூலை 3) பிற்பகலில் செய்திகள் வெளியாயின. இதனை நலவழித்துறை மறுத்துள்ளது.
இது குறித்து காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவராஜ்குமார் கூறியது: காரைக்காலில் குடி நீர் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு கழிவு நீர் கலந்ததாலும், சுகாதாரமற்ற குடிநீரை பருகியதாலும் பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு செயல்பாடுகளையும் நலவழித்துறை மேற்கொண்டு வருகிறது.
இதுவரை வயிற்றுப்போக்கு பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. ஏற்கனவே இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த 60 வயதுக்கும் மேற்பட்ட 2 பேருக்கு வயிற்றுப் போக்கும் ஏற்பட்ட நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தனர். வயிற்றுப் போக்கால் தற்போது உயிரிழப்பு என்று பரவிய தகவல் தவறானது.
வயிற்றுப் போக்கால பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பான வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றார்.