காரைக்கால்: காரைக்காலில் வயிற்றுப் போக்கால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, காலராவுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ள நிலையில் 1441 சட்டப் பிரிவின் கீழ் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட நீதிபதியுமான எல்.முகமது மன்சூர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144(2)ன் கீழ் இன்று(ஜூலை 3) பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
காரைக்காலில் ஏராளமான எண்ணிக்கையிலானோர் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு, காலரா அறிகுறிகள் தென்படுவதால் புதுச்சேரி சுகாதாரத் துறையால் பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
உணவகங்கள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள், விடுதிகள், மருத்துவமனைகள், பேக்கரிகள் உள்ளிட்டவற்றில் காய்ச்சிய அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீர்த்தேக்கத் தொட்டிகள் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டு குளோரின் கலக்கப்பட வேண்டும். கைகளை சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
உணவகங்களில் உணவு உண்பதற்கு முன்னர் சோப்பு போட்டு கைகளை கழுவுவதை உறுதிப்படுத்த வேண்டும். குடிநீர் விநியோகிக்கப்படும் இடங்களில் குளோரின் கலக்கப்பட வேண்டும். கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் காய்ச்சிய அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மட்டுமே பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். கைகளை சுத்தம் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள், வருவாய் துறை அதிகாரிகள் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும். உணவகங்கள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த உத்தரவை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144(2) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.