கிரிப்டோ – நேற்று… இன்று… நாளை?

கடந்த இரண்டு மாதங்களாகவே கிரிப்டோகரன்சிகளின் (Crypto currency) மதிப்பு வெகுவாக சரிந்தபடி இருக்கிறது. கிரிப்டோ மூலம் ஒரே இரவில் மில்லியன்கர்களாக ஆகிவிட்டோம் என சுயதம்பட்டம் அடித்த டிவிட்டர், இன்ஸ்டா, டிக்டாக் வீடியோக்கள் நின்று போனது மனிதகுலத்திற்கு கிடைத்த சிறிய லாபம் என்பது ஒரு புறம் இருந்தாலும், நவீன நிதித் தொழில்நுட்பமாக கொண்டாடப்படும் கிரிப்டோவின் சரிவு பற்றிய தெளிவான புரிதல் வேண்டும் என்பது இந்தக் கட்டுரையின் நோக்கம்.

கிரிப்டோ இவ்ளோ இறங்கிருச்சா? நல்லா ரெப்ஃரெஷ் பண்ணி பாரு…

நெருப்பு மேல் வைத்த மெழுகாக கிரிப்டோ சந்தைகள் சமீபத்தில் உருகிப்போய்க் கொண்டிருப்பதற்கு பின்னால் இரண்டு முக்கிய காரணங்கள். அவற்றை பார்க்கும் முன்னால் சில கிரிப்டோ அடிப்படைகளையும், அண்மை செய்திகளையும் பார்த்துவிடலாம்.

  • கிரிப்டோ உலகின் முதல் குடிமகன் பிட்காயின். அதனை ‘கிரிப்டோ குரு’ என்றும் அழைக்கலாம். காரணம், 2008ல் வெளியான பிட்காயின் போட்ட கோட்டில் இருந்துதான் கிரிப்டோ என்பதற்கான ரோடு போடப்பட்டு, பல வகையான கிரிப்டோக்கள் வரத் தொடங்கின.

‘பிட்காயின்’ – கிரிப்டோக்களின் பாட்ஷா!
  • கணினிகளுக்கிடையே பொழுதுபோக்காக இருந்து வந்த பிட்காயின் வணிகத்திற்காக முதலில் பயன்படுத்தப்பட்டது – பீட்சா வாங்குவதற்காக. 2010 ம் ஆண்டில் பத்தாயிரம் பிட்காயின்கள் செலவில் இரண்டு பீட்சாக்கள் வாங்கப்பட்டது. அந்த நாட்களில் பிட்காயினுக்கு குறிப்பிட்ட மதிப்பு என்பது நிர்ணயிக்கப்படவில்லை. பிட்காயினின் மதிப்பு உச்சத்தில் இருந்த 2021ம் ஆண்டின் மதிப்பில் சொல்ல வேண்டுமென்றால், இது 4500 கோடி ரூபாய்க்கு சமம்! உலகின் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட டின்னர் அது என தாராளமாக சொல்லலாம்.

2 பீட்சா 4500 கோடிப்பு!

மேற்கண்ட தகவல் உள்ளிட்ட பிட்காயினின் வரலாறு பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்பினால், நியூயார்க் டைம்ஸ் இதழில் தொழில்நுட்ப எழுத்தாளர் நத்தானியேல் பாப்பர் எழுதியிருக்கும் “Digital Gold” நூலைப் படியுங்கள்.

  • பிட்காயின் தொடங்கிவைத்த இந்த புதுமையான நிதித் தொழில்நுட்பத்தின் கொள்கைபரப்பு செயலாளராக 2015ல் உதயமானது எத்தூரியம் (Ethereum) தொழில்நுட்பம். பிட்காயினுக்கு அடுத்த பிரபல கிரிப்டோவாக, தோற்றுவிக்கப்பட்ட 2015இல் இருந்தே இருந்து வருகிறது. எத்தூரியம் தொழில்நுட்பத்தின் கிரிப்டோவிற்கு ஈத்தர் (Ether) என பெயர்.

Ethereum
  • பிட்காயின், ஈத்தர் தவிர்த்து கிட்டத்தட்ட 19,000 கிரிப்டோ கரன்சிகள் இப்போதைக்கு சந்தைகளில் பரிமாற்றத்தில் இருக்கின்றன. இவை அனைத்தின் ஏற்ற, இறங்கங்களைப் பார்த்தால், அவை பிட்காயின் மற்றும் ஈத்தரை சார்ந்தே இருப்பது தெரிய வரும்.

பிரபல கிரிப்டோகரன்சிகளின் டிரெண்ட்
  • உலகில் 195 தேசங்களும், அவற்றில் 162 கரன்சிகளுமே புழக்கத்தில் இருக்கின்றன என்பதுடன் ஒப்பிடுகையில் இது மிக மிக அதிகம் என்பது தெளிவாக தெரியும். தேசங்களின் மத்திய வங்கிகள் வெளியிடும் ரூபாய், டாலர், தினார் இன்னபிற கரன்சிகளுக்கு ஃபியாட் (Fiat) என பெயர்.

  • மேற்படி கிரிப்டோ கரன்சிகளையும், ஃபியாட் கரன்சிகளையும் ஒன்றுக்கொன்று பரிமாற்றம் செய்து கொள்ளும் சேவைகளை கிரிப்டோ சந்தைகள் என அழைக்கிறார்கள். காயின்பேஸ், ஜெமினி, செல்சியஸ், FTX, பினான்ஸ் போன்றவை பிரபல கிரிப்டோ சந்தைகள். கிரிப்டோவின் பெரும் வீழ்ச்சி காரணமாக, வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருக்கும் கிரிப்டோவை இடம் மாற்ற அனுமதியில்லை என அறிவித்திருக்கிறது செல்சியஸ். இருபது சதவீத பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியிருக்கிறது காயின்பேஸ்.

ஸ்டேபிள்காயின்களின் வருகை…
  • கிரிப்டோ பணத்திற்கும், ஃபியாட் பணத்திற்கும் இருக்கும் பரிமாற்ற மாறுமாடு மாறிக்கொண்டே இருப்பது நிதர்சனம் என்பதால், சில வருடங்களுக்கு முன்னால் நிலையான பணம் (Stablecoin) என்ற முறைமை கொண்டுவரப்பட்டது. கிரிப்டோவாக செயல்பாட்டில் இருந்தாலும், சுழற்சியில் இருக்கும் நிலையான பணத்திற்கு நிகரான சொத்து பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு ஒரு கோடி இந்திய ரூபாய் நிலைப்பணம் கிரிப்டோ வடிவில் சுழற்சியில் இருந்தால், அந்த மதிப்பை காக்கும் விதத்தில் ஒரு கோடி ரூபாய் வைப்புக்கணக்கு (Fixed Deposit) ஒன்றில் இருக்க வேண்டும். வாலட் என்னும் கிரிப்டோகணக்கில் நீங்கள் ஆயிரம் ரூபாய் நிலைப்பணத்தை வைத்திருந்தால், அதற்கு நிகரான பணம் பத்திரமாக இருக்கிறது என்ற நிம்மதியுடன் தூங்கலாம். டெத்தர் (Tether) என்ற பெயரில் வெளியான நிலைப்பணம்தான் கிரிப்டோ உலகில் முதல்முதலாக அறிமுகமானது. 62 பில்லியன் டாலர்களுக்கு சற்று அதிகமான அளவில் சுழற்சியில் இருக்கும் டெத்தரின் வெற்றியை தொடர்ந்து அதே மாடலில் வேறு சில நிலையான பணங்களும் வெளியிடப்பட்டு சுழற்சியில் இருக்கின்றன.

சரி, சந்தை சரிவிற்கான காரணங்களுக்கு வருவோம்.

Terra Luna

முதல் காரணம், லூனா/டெரா என்ற நிலைப்பணத்தில் ஏற்பட்ட கோளாறு.

ஆழமாக பார்க்கலாம். அதற்கு முன்…

தென் கொரியாவில் இருக்கும் க்வான் என்ற கிரிப்டோ பொறியாளர் 2018 இல் அறிமுகப்படுத்திய நிலைப்பண மாடல், இதுவரை இருந்த நிலைப்பண மாடல்களை விட முற்றிலும் மாறுபட்டது. பங்குச்சந்தைகளில் நடுவண் வர்த்தகம் (arbitrage trading) என்ற முறைமை உண்டு. இரண்டு சந்தைகளில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கும் ஒரு பங்கின் விலையில் மாறுதல் இருந்தால், எங்கே விலை குறைவாக கிடைக்கிறதோ அங்கே வாங்கி, அதிக விலைக்கு விற்கப்படும் சந்தையில் விற்று, அதன் வித்தியாசத்தை லாபமாக மாற்றிக் கொள்ளும் இந்த முறைமையை திறந்த சந்தை பொருளாதாரம் ஊக்குவிக்கிறது. காரணம், நடுவண் வர்த்தகத்தின் மூலம் சந்தைகளின் திறன் அதிகரிப்பது மட்டுமல்லாமல், பங்குகளின் விலை மேலும், கீழும் ஏறி, இறங்காமல் நிலையான விலை கிடைக்க முதலீட்டாளர்களுக்கு உதவுகிறது.

நிற்க!

லூனா/டெரா வீழ்ச்சி – செயின் ரியாக்ஷன் ஆரம்பித்தது இங்கேதான்!

நடுவண் வர்த்தகத்தை அடிப்படையாக கொண்டு, வைப்புக்கணக்கு இல்லாத நிலைப்பண அமைப்பு ஒன்றை வடிவமைத்து , லூனா/டெரா என பெயரிட்டு, கிரிப்டோ உலகத்தின் கவனத்தை தன்மீது ஈர்த்தார் க்வான். இப்படி நிலைப்பணத்தை உருவாக்க முடியாது என சில எதிர்க்குரல்கள் வந்தாலும், லூனா/டெரா கிடுகிடுவென பிரபலமானது. பல்வேறு கிரிப்டோ சந்தைகளில் இந்த நிலைப்பணம் வந்ததும் முண்டியடித்துக் கொண்டு வாங்கினார்கள். லூனா/டெராவை அடகாக வைத்து மாதாந்திர வட்டி கொடுக்கும் தில்லாலங்கடி வணிகங்களெல்லாம் புற்றீசலாக வெளிவந்தன. இது எப்படித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் நானும் சிறிய அளவில் வாங்கி வைத்திருந்தேன்…

நீள் கதையை சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஒரு டாலருக்கு இணையாக இருக்க வேண்டிய லூனா/டெரா சென்ற மாதத்தில் மதிப்பு குறைய ஆரம்பித்து இன்று ஒரு பைசா அளவு மதிப்பு கூட இல்லாமல் சின்னாபின்னாமாகிவிட்டது. கணித வணிக அமைப்பின்படியெல்லாம் நிதியை உருவாக்க முடியாது என்ற எதிர்ப்பாளர்களின் கருத்து உறுதியானது. கோடிக்கணக்கில் லூனா/டெராவில் பணத்தை இழந்தவர்களின் கதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. படு புத்திசாலியான பொறியாளராக கொண்டாடப்பட்ட க்வான் இப்போது வில்லனாக தோற்றமளிக்கிறார்.

லூனா டெரா நிறுவனர் ‘தோ க்வான்’

இருக்கட்டும். ஆயிரக்கணக்கான கிரிப்டோ கரன்சிகள் இருக்கையில் ஒரு நிலைப்பண கிரிப்டோ எப்படி இவ்வளவு பெரிய சரிவிற்கு காரணமாக இருக்க முடியும் என்ற கேள்வி எழலாம். டெத்தரில் தொடங்கி, லூனா/டெரா வரை நிலைப்பணங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது கிரிப்டோ சந்தை பரிவர்த்தனைகளில் கணக்கை முடித்து வைக்கும் செட்டில்மெண்டுக்காகவே.

உதாரணத்திற்கு, நீங்கள் பல கிரிப்டோக்களை விற்கிறீர்கள்; சிலவற்றை வாங்குகிறீர்கள். இந்த பரிவர்த்தனைகளின் நிகர மதிப்பு உங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் அல்லவா? அதை சாதாரண கிரிப்டோவாக கொடுத்தால், அடுத்த நாளே அது ஏறி, இறங்கும் சாத்தியக்கூறு உண்டு. ஃபியாட் பணமாக வங்கிக் கணக்கிற்கு கொண்டு செல்ல, சில நாட்கள் ஆகலாம். சில நாடுகளின் விதிகளின்படி வரி விதிப்பு போன்றவையும் நிகழும். இதற்குப் பதிலாக கிரிப்டோவாகவே உங்களுக்கு செட்டில் செய்து, அந்த கிரிப்டோவின் மதிப்பு நிலையாக இருக்கும் என்ற உறுதி இருந்தால் நீங்கள் அதைத்தானே விரும்புவீர்கள்? இந்த தேவைக்காகத்தான் லூனா/டெராவை வாங்கி வைத்திருந்தது கிரிப்டோ பொதுஜனம்.

லூனாவின் மதிப்பு சரிய ஆரம்பித்தததும், கையில் வைத்திருக்கும் மற்ற கிரிப்டோக்களையும் விற்க ஆரம்பிக்க சீட்டுக்கட்டால் கட்டிய மாளிகையாக உதிர ஆரம்பித்ததது கிரிப்டோ.

சில மாதங்களுக்கு முன்னால் அனைத்து கிரிப்டோக்களின் மொத்த மதிப்பு 3 டிரில்லியன் டாலர்களுக்கு நிகராக இருந்தது. மதிப்பீட்டிற்காக சொல்ல வேண்டுமானால், இந்திய பொருளாதாரத்தின் அளவு இன்னும் 3 டிரில்லியனை தாண்டவில்லை. இந்த கட்டுரை எழுதப்பட்டும் நிலையில் மொத்த கிரிப்டோவின் மதிப்பு ஒரு டிரில்லியனுக்கும் கீழே. ஆக, 65 சதவீதத்திற்கும் மேலான வீழ்ச்சி அடைந்திருக்கிறது கிரிப்டோ.

பை தி வே, பங்குச்சந்தைகள் காளையாகவும், கரடியாகவும் செயல்படும் என முதலீட்டு மேலாண்மையாளர்கள் சொல்வதை கேட்டிருக்கலாம். சமீபத்திய உயர்வை விட இருபது சதவீதத்திற்கும் மேல் மதிப்பு வீழ்ந்ததென்றால், அச்சந்தை கரடி என்றும், இரண்டு சரிவுகளுக்குப் பின்னர் இருபது சதவீதத்திற்கு மேல் உயர்ந்து கொண்டே சென்றதென்றால் காளை என்றும் பொருள். கிரிப்டோ சந்தையின் சமீபத்திய மதிப்புகளைப் பார்க்கும்போது அது கரடியால் கடித்து குதறப்பட்டுக் கொண்டிருக்கும் உண்மை தெரியும்.

ஹலோ கிரிப்டோ முதலீட்டாளர்களே!

அடுத்த காரணம், சற்றே பொதுவானது…

உலகப் பொருளாதாரமே இடியாப்ப சிக்கலாகத்தான் உள்ளது!

கொரோனாவில் லாக்டவுணினால் ஏற்பட்ட உலகளாவிய விநியோக சங்கிலி (supply chain) சிக்கல்களின் எச்சங்கள், ரஷ்ய-உக்ரேன் போர், அதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் எண்ணெய் விலை அதிகரிப்பு, அதை ஒட்டிக்கொண்டு பயமுறுத்தும் விலைவாசி உயர்வு, பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டிவிகிதத்தை அதிகரிப்பதால் வரும் அழுத்தம் என பல்வேறு காரணிகளால் சந்தைகளில் இருக்கும் பங்குகளின் விற்பனை அதிகப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. இதன் பக்கவிளைவாக, கையில் இருக்கும் கிரிப்டோவை விற்பதும் நடக்கிறது.

மொத்த உலக பங்குச்சந்தை மற்றும் கிரிப்டோ சந்தைகளின் ஏற்ற, இறக்கங்கள் கண்ணாடியை வைத்து ஒன்றையொன்று பிரதிபலிப்பதாக இருப்பது இதற்கு ஆதாரம்.

உலக சந்தை vs பிட்காயின்

மொத்தத்தில், காற்றழுத்தங்கள் சரியாக பொருந்திவரும் ‘சரியான புயலை’ (Perfect Storm) சந்தித்தபடி இருக்கிறது தற்கால கிரிப்டோ உலகு.

ஓகே, அண்டன்.

‘அப்படியானால், கிரிப்டோவின் கதி அவ்வளவுதானா?’

என்ற அடுத்த கேள்வி வரலாம்.

எனது பதில் – ‘நிச்சயமாக இல்லை!’

காரணங்களை விவரிக்கிறேன்…

புதுமையாக்கத்தால் உருவாகும் எந்த தொழில்நுட்பம் வந்தாலும், அதன் தொடக்க வருடங்கள் சற்று கலக்கத்துடன் இருப்பதை பார்க்க முடியும். நிலக்கரி மற்றும் நீராவியில் ஆரம்பமான தொழில்புரட்சி தருணத்தில் தொடங்கி இன்றைய கிரிப்டோ வரை இதை பார்க்கலாம். டிஜிட்டல் தொழில்நுட்ப வரலாற்றை எடுத்துக் கொண்டால், தந்தி, டெலக்ஸ், ஃபேக்ஸ் என தொடங்கி “நைஜீரிய இளவரசர்” என விளித்துக் கொண்டு ஏமாற்ற அழைக்கும் ஈமெயில்கள் வரை புதிய தொழில்நுட்பங்களை ஏமாற்றாளர்கள் பயன்படுத்த முனைவதும், அதைத் தொடர்ந்து அந்தந்த தொழில்நுட்பங்கள் அதை ஈடுகொள்ளும் பாதுகாப்பு அரண்களை அமைத்து பலப்படுத்துவதும் என தொடர் நடவடிக்கைகள் இருப்பதை பார்க்க முடியும்.

மின்சாரம், எரிவாயு போல அனைவரும் பயன்படுத்தும் சேவையாகிவிட்ட இணையம் தனது வாழ்வை 90களில் தொடங்கியபோது இது போன்ற சிக்கல்கள் இருந்தது. கிரெடிட் கார்டு, பிறந்த நாள் உள்ளிட்ட பிரத்யேக தகவல்களை திருடுவது எளிதானது. பெரும் முதலீடுகளில் தொடங்கப்பட்ட Webvan போன்ற நிறுவனங்கள் திவாலாகிப்போக, இணையத்தின் மீது அவநம்பிக்கை கலந்த முணுமுணுப்பு மக்கள் மத்தியில் இருந்தது. ஊடகங்களும் இந்த உணர்வுகளை பிரதிபலிக்க தவறவில்லை. உதாரணத்திற்கு பிப்ரவரி 1995ல் வெளியான நியூஸ்வீக் இதழ் இணையம் பெரிதாக வளரப்போவதில்லை என்ற “ஆருடத்தை” கவர் ஸ்டோரியாக சொன்னது.

இன்டெர்நெட்டுக்கு எதிர்காலம் இல்லை! – 1995-ல் வெளிவந்த பிரபல கவர் ஸ்டோரி

நடந்தது என்னவோ தலைகீழ். அமேசான், ஈபே போன்ற நிறுவனங்கள் இணையத்தின் வலிமையை புரிந்து கொண்டு தங்களது சேவையை அதன் மீது கட்டிக்கொண்டு போக, 2000ம் வருடத்தில் இணையம் என்ற ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட நிறுவனமாக கூகுள் மாறிய பின்னர், இணையம் பெருமக்கள் பயனீட்டு வடிவமாக மாறிவிட்டது. (அமேசான் தொடங்கிய ஆறு மாதங்களுக்கு எந்த ஆர்டரும் வரவில்லை என்பதும், வந்த முதல் ஆர்டருக்கான பணத்தை கரன்சியாக தபாலில் அனுப்பியிருந்ததையும் பற்றி ஜெப் பெசோஸ் விவரிக்கும் வீடீயோவை பார்க்க இதைச் சொடுக்குங்கள்)

ஃபியாட் பணம் போல கிரிப்டோ நுகர்வோர் பயனீட்டு பரிவர்த்தனைகளுக்கு பயன்படுமா என்றால் அது சந்தேகமே.

காரணம் –

1. கிரிப்டோ பரிவர்த்தனைகளுக்கு சிறிய கட்டணம் ஒன்றை செலுத்த வேண்டும். “எரிவாயு கட்டணம்” (Gas fee) என அழைக்கப்படும் இந்த கட்டணம் பிட்காயின், எத்தூரியம் போன்ற தொழில்நுட்பங்களில் மிக அதிகம். உதாரணத்திற்கு, ஆயிரம் ரூபாய்க்கு சமமான பிட்காயினை அனுப்ப வேண்டுமென்றால், இன்றைய விலைக்கு இருநூறு ரூபாய்க்கு சற்று அதிகமாக எரிவாயு கட்டணம் கட்டியாக வேண்டும்.

என்ன இவ்ளோ Gas Fees-ஆ!

2. கிரிப்டோ பணங்களை சேமித்துக்கொள்ள தேவைப்படும் வாலட்டை உருவாக்கி அதற்கான சங்கேத கடவுச்சொல்லை பத்திரப்படுத்துவது என்பதெல்லாம் சாதாரண பயனீட்டாளர்கள் பின்பற்ற முடியாத கடினமான வழிமுறைகள்.

இவ்விரண்டையும் நிவர்த்தி செய்யும் கிரிப்டோ தொழில்நுட்பங்கள் வந்தபடி இருக்கின்றன.

கிரிப்டோவின் அடிப்படை தொழில்நுட்ப வடிவான கூடுசங்கிலி (பிளாக்செயின்) இணையத்தின் அடுத்த வடிவாக பார்க்கப்படுகிறது. இன்று நாம் பயன்படுத்தும் இணையம் 2.0 என அழைக்கப்படுகிறது. இந்த 2.0 இணையத்தின் மேல் கட்டப்பட்டிருக்கும் சேவைகள், அதை கட்டிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதனை மையப்படுத்தப்பட்ட சேவைகள் (Centralized services) என்கிறோம். இதற்கு உதாரணங்களாக, கூகுள், அமேசான், நெட்பிளிக்ஸ் போன்றவற்றை சொல்லலாம். கொடுக்கும் காசிற்கு சமமான மதிப்பை பயனீட்டாளர்களுக்கு இந்த சேவைகள் கொடுக்கின்றன என்றாலும், பயனீடு பற்றிய தகவல்கள் இந்த நிறுவனத்திற்கு மட்டுமே சொந்தமானவை; இதை எளிதில் அவர்கள் வெளியிடுவதில்லை.

கூடுசங்கிலி தொழில்நுட்பமோ பரிவர்த்தனை தகவல்களை அனைவரும் பார்த்துக்கொள்ளும்படி திறந்த வெளியில் வைக்கிறது. இணையம் 3.0 என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பத்தின் வெளிப்படைத்தன்மை பல விதத்தில் லாபமளிக்கக்கூடியது என்பதால், கூடுசங்கிலி தொழில்நுட்பம் Fidelity போன்ற மிகப்பெரிய நிதி நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. சீனா, அமெரிக்கா, ஏன், இந்தியா உட்பட பல நாடுகள் தங்களை ஃபியாட் பணத்தை கூடுசங்கிலி மூலம் விநியோகம் செய்யலாமா என்ற உள் ஆலோசனையில் இருப்பது அவ்வப்போது ஊடக வெளிச்சற்கு வருகிறது.

Web 1.0 vs Web 2.0 vs Web 3

குறிப்பாக, சாதாரண நுகர்வோருக்கு கூடுசங்கிலி தொழில்நுட்பத்தால் கிடைக்கப்பெற்றிருக்கும் ஒரு முக்கிய பலன் – NFT. நீட்டிச் சொன்னால் Non-Fungible Token எனப்படும் அழிக்கமுடியா, சேகரிக்கத்தகுந்த NFT என்ற டிஜிட்டல் வில்லைகளை பாதுகாக்கவும், பரிவர்த்தனை செய்யவும் சிறந்த தொழில்நுட்பம் கூடுசங்கிலி மட்டுமே.

NFT-யா? புதுசா ஏதோ சொல்றாரு!

NFTயின் பயன்பாட்டிற்கான மற்றொரு கோணமும் இருக்கிறது. உலகமெங்கும் 5ஜி தொழில்நுட்பத்திற்கான உள்கட்டமைப்பு நிறுவப்பட்டு வருகிறது. இன்று நாம் பயன்படுத்தும் தகவல் அளவை விட பல மடங்கு அதிகமாக பயன்படுத்த உதவும் 5ஜி, மெய்நிகர் உலக தொழில்நுட்பங்களை (Metaverse) எவரும் பயன்படுத்தும் விதத்தில் சாமானியப்படுத்தும். இந்த மெய்நிகர் உலகத்தின் பயனீட்டு கரன்சியாக பல்வேறு வகையான NFTக்கள் பயன்படும் சாத்தியக்கூறு மிக மிக அதிகம்.

(NFT பற்றிய நீள் அறிமுக சீரிஸ் ஒன்றை விகடன் டீம் செய்திருக்கிறது. இதில் நிபுணத்துவம் பெற, அதன் முதல் பகுதியில் இருந்து ஆரம்பியுங்கள்)

இன்றிருக்கும் 19,000 கிரிப்டோக்கள் மறைந்து கை விட்டு எண்ணும் அளவிற்கு குறையலாம். அரசுகளின் சட்ட மேலாண்மை அவற்றின் மீது அதிகரிக்கலாம். ஒன்று மட்டும் நிச்சயம் – கூடுசங்கிலியும், கிரிப்டோவும் நவீன தொழில்நுட்ப நெடுஞ்சாலையில் நிரந்தரமாக இருக்கப்போகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.