மதுரை: கீழமை நீதிமன்றங்களின் உத்தரவுகளை நீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை 300 கிலோ கஞ்சா கடத்தலுக்கு உதவி செய்ததாகப் போதை தடுப்புப் பிரிவு சிறப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி பிரபாகரன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி ஆனது. இதையடுத்து உயர் நீதிமன்றக் கிளையில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார்.
அதில் பழைய விவரங்களை மறைத்து புதிதாக மனுத் தாக்கல் செய்வதுபோல் தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்த விவகாரம் அரசு வழக்கறிஞர் மூலம் நீதிபதி புகழேந்திக்கு தெரியவந்தது. பிரபாகரன் வழக்கு மீண்டும் பட்டியல் இடப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி புகழேந்தி, நீதிமன்ற உத்தரவை மறைத்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் இது குறித்து நீதிபதி புகழேந்தி விரிவான உத்தரவு பிறப்பித்தார். அதில், கீழமை நீதிமன்றங்கள் விசாரணை செய்யும் வழக்குகளின் உத்தரவுகளை முறையாக நீதிமன்ற வலைதளங்களில் பதிவிடுவதில்லை. அனைத்து கீழமை நீதிமன்றங்கள் தினமும் நடைபெறக்கூடிய அனைத்து வழக்குகளின் நிலைமைகளை நீதிமன்ற வலைதளமான ecourts.gov.in-ல் பதிவேற்றம்செய்ய வேண்டும்.
குறிப்பாக ஜாமீன் மனுக்கள், முன்ஜாமீன் மனுக்கள், தீர்ப்புகள் ஆகியவற்றை உடனே பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை உயர் நீதிமன்றப் பதிவாளர் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் அனுப்ப வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.