புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவு கேட்டு அதிமுக., தலைமையை ராகுல் தொடர்பு கொண்டதாக வெளியான தகவல் தவறானது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
வரும் 18- ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இருவரும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவு கேட்டு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி மூலம் ராகுல் காந்தி தொடர்பு கொண்டதாக செய்தி வெளியானது.
இதனை மறுத்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில் ‘‘குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவு கேட்டு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் ராகுல் தொடர்பு கொண்டதாக வெளியான தகவல் போலியானது.
முற்றிலும் தவறானது. அப்படி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசப்படவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் – திமுக கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி பலவீனப்படுத்த முயற்சி நடக்கிறது. அதனை தாங்கும் அளவுக்கு கூட்டணி வலுவாக உள்ளது.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.