புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் நிறுத்தபட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஆளும் பாஜக சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். ஜூலை18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிது. இதனைத் தொடர்ந்து துணை குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் மீண்டும் வெங்கய்ய போட்டியிட வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது. பா.ஜ.கவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.
இந்தநிலையில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
காங்கிரஸில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதுக்கட்சியை அவர் நடத்தி வருகிறார். அமரீந்தர் சிங், பாஜகவுடன் கூட்டணி அமைத்து பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்து தோல்வியடைந்தார். அதேசமயம் உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டுள்ள அமரீந்தர் சிங் வேகமாக செயலாற்றுவதில் சிக்கல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். போதிய பலம் இருப்பதால் பா.ஜ.க நிறுத்தும் வேட்பாளர் வெற்றி உறுதியாகி உள்ளது.