வேலூர் மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் சமூகவலை தளங்களில் கேலிக்குள்ளாகி வருகிறது.
வேலூர் பேரி காளியம்மன் கோயில் தெருவில் கடந்த 28-ம் தேதி காலை அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை பணியின்போது சாலையோரம் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தையும் சேர்த்து சாலை அமைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேநேரம், அந்த சிமென்ட் சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்ட தாகவும் புகார் எழுந்தது.
அதேபோல், வேலூர் சாயிநாத புரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பாழடைந்த ஜீப்பை அகற்றாமல் தார்ச்சாலை அமைத்த பணியும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளான இந்த சாலை பணியால் மாநகராட்சி அதிகாரிகள் நிம்மதி இழந்துள்ளனர். ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட சாலை பணிகளின் கேலிகளால் அந்த குறிப்பிட்ட சாலை பணிக்கான டெண்டரை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கு மாறு மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக் குமாரிடம் கேட்டதற்கு, ‘‘பேரி காளியம்மன் கோயில் தெருவில் பகல் நேரத்தில் சாலை அமைக்க முடியாது. வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நள்ளிரவில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அந்த நேரத்தில் அந்த தெருவில் இருந்த வாகனங்களை அதன் உரிமை யாளர்கள் அகற்றிய நிலையில் ஒரே ஒருவர் மட்டும் வாகனத்தை அகற்றாமல் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட நபர்களிடம் தகராறில் ஈடுபட்டுவிட்டு வாக னத்தை அங்கேயே நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். அவர்கள் இரு வருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையால் சிமென்ட் சாலை சமூக வலைதளங்களில் பிரச் சினையாக உருவெடுத்தது. அந்த இடத்தை ஒப்பந்ததாரர் சரி செய்து கொடுத்துள்ளார்.
தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு
அதேபோல், சாயிநாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெரு வில் செயல்பட்டு வந்த அரசு அலுவலகத்தின் வாகனத்தை கடந்த 10 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் அங்கேயே நிறுத்தி யுள்ளனர். பாழடைந்த அந்த பழைய வாகனத்தை அவர்கள் அங்கேயே விட்டுவிட்டுச் சென் றுள்ளனர். அந்த வாகனத்தை சாலைப்பணிக்கான ஒப்பந்ததாரர் அகற்ற முடியாமல் போகவே அந்த வாகனத்தை விட்டுவிட்டு சாலை அமைத்துள்ளார். மேலும், அந்த சாலை அமைத்து ஒரு மாதத்துக்கு மேலாகிறது. பேரி காளியம்மன் கோயில் தெருவின் சிமென்ட் சாலை சர்ச்சை ஏற்பட்ட பிறகு இந்த சாலை குறித்த தகவல் இப்போது தெரியவந்துள்ளது.
இந்த பிரச்சினைகளில் சாலை பணிக்கான டெண்டரை ரத்து செய்யுமாறு மேயர் கூறியுள்ளார். அதை தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை அளித்த பிறகே ரத்து செய்ய முடியும். அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.