கொரோனாவுக்கு ஆயுஷ் சிகிச்சை: தகவல்களை வெளியிட்ட மத்திய அரசு

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது மற்றும் மேலாண்மையில், நாட்டிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பின்பற்றப்படும் ஆயுஷ் அடிப்படையிலான சிகிச்சை பற்றிய தகவல்களின் தொகுப்பை நித்தி ஆயோக் வெளியிட்டுள்ளது.

நித்தி ஆயோக் துணைத்தலைவர் சுமான் பெரி மற்றும் மத்திய ஆயுஷ் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முஞ்சப்பாரா மகேந்திரபாய் கலுபாய் ஆகியோர் இந்தத் தொகுப்பை வெளியிட்டனர். நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் மற்றும் நித்தி ஆயோக், ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து நித்தி ஆயோக் துணைத்தலைவர் சுமன் பெரி வெளியிட்டுள்ள செய்தியில், “கொரொனா தொற்று பரவிய சோதனையான காலகட்டத்தில், தேசிய மற்றும் மாநில அளவில் பின்பற்றப்பட்ட ஆயுஷ் சிகிச்சை முறைகள் எத்தகைய பலனைக் கொடுத்தது என்பது பற்றி, நாம் கற்றுக்கொண்டதை அனைவருக்கும் தெரிவிப்பது சிரமமான ஒன்று. ஆனால், இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பின்பற்றப்பட்ட ஆயுஷ் மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எந்தளவு வலுப்படுத்தியது என்பது பற்றிய தகவல்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆவணம், பாரம்பரிய மருத்துவ கட்டமைப்பைக் கொண்டுள்ள பிற நாடுகளுக்கு, முக்கிய அறிவாற்றலின் ஆதாரமாகத் திகழும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது, கோவிட்-19 மட்டுமின்றி, எதிர்காலத்தில் உருவாகக்கூடிய பிறவகை தொற்றுகள் மற்றும் பெருந்தொற்றுக்கு எதிரான நமது நடவடிக்கைகளுக்கு குறிப்பிடத்தக்க அளவு உதவிகரமாக இருக்கும்“ என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் தொகுப்பை வெளியிட்டுப் பேசிய மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் டாக்டர் முஞ்சபாரா மகேந்திரபாய் கலுபாய், “இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய சுகாதார நெருக்கடியை எதிர்கொள்வதில், தற்கால மருத்துவ முறைகளுடன், ஆயுஷ் மருத்துவ முறைகளும் முக்கியப் பங்கு வகித்தன. பாரம்பரிய மற்றும் வழக்கமான சுகாதார சிகிச்சை முறைகளின் கூட்டு முயற்சிகள், முழுமையான சுகாதாரசேவை மாதிரியை வழங்குவதில் உலகிற்கு வழிகாட்டும் என்று நான் நம்புகிறேன்“ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.