புதுடெல்லி: சீனா, ரஷ்யா, தென் கொரியாவின் போர் விமானங்களை நிராகரித்த மலேசியா அரசு, இந்தியாவின் தேஜஸ் இலகு ரக போர் விமானத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியா, தனது விமானப்படையில் நீண்ட காலமாக பயன்படுத்தி வரும் ரஷ்ய தயாரிப்பான சுகோய்-50 ரக போர் விமானங்களுக்கு விடை கொடுத்து, புதிய நவீன விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை பெற, சீனாவின் ஜெஎப்-17, தென் கொரியாவின் எப்ஏ-50, ரஷ்யாவின் மிக்-35, யாக்-130 மற்றும் இந்தியாவின் தேஜஸ் போர் விமானங்கள் போட்டியிட்டன. கடுமையான போட்டிக்கு மத்தியில் இந்தியாவின் எச்ஏஎல் தயாரிப்பான ஒற்றை இன்ஜின் கொண்ட இலகு ரக சூப்பர்சோனிக் போர் விமானமான தேஜஸ் எம்கே-1ஏ-வை வாங்க மலேசியா விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எச்ஏஎல் நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குநருமான ஆர்.மாதவன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சீனாவின் ஜெப்-17, தென் கொரியாவின் எப்ஏ-50 போன்ற விமானங்களுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் தேஜஸ் எம்கே-1ஏ மிகச்சிறந்த நவீன அம்சங்களை கொண்டுள்ளது. மேலும், உக்ரைன் போர் காரணமாக மேற்கத்திய நாடுகள் பல்வேறு தடை விதித்துள்ளதால் ரஷ்யாவின், சுகோய்-50 விமானத்திற்கான உதிரிபாகங்களை பெறுவதில் பல சிரமங்களை மலேசியா எதிர்கொள்கிறது. இதற்காக, சுகோய்-50 விமானத்தை பராமரிக்க, மறுசீரமைக்க, பழுதுபார்க்க சிறப்பு மையத்தை மலேசியாவில் அமைத்து தருவதாக உறுதி அளித்துள்ளோம். சீனாவின் ஜெஎப்-17 விமானம் தேஜஸ் விமானத்தை விட மலிவானது என்றாலும், சுகோய்-50 விமானத்தை பராமரிக்கும் சலுகையை ரஷ்யாவைத் தவிர்த்து இந்தியா மட்டுமே வழங்கி உள்ளது. அவர்களின் பட்ஜெட் இலக்குகளை நாங்கள் பூர்த்தி செய்துள்ளதால், தேஜஸ் விமானத்தை வாங்க மலேசியா அதிகம் விரும்புகிறது. இதுதொடர்பாக, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க மலேசிய உயர் அதிகாரிகள், நிபுணர்கள் குழு விரைவில் இந்தியா வர உள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், மேலும் பல சர்வதேச ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார். இந்திய விமானப் படை 83 விமானத்திற்கு ஆர்டர்கடந்த ஆண்டு பிப்ரவரியில், இந்திய விமானப்படைக்கு 83 தேஜஸ் போர் விமானங்களை வாங்க ரூ.48 ஆயிரம் கோடியில் எச்ஏஎல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் முதல் விமானம் 2025ம் ஆண்டில் வழங்கப்படும் என்றும், 2030ல் 83 விமானங்களையும் ஒப்படைக்கப்படும் என்றும் எச்ஏஎல் தெரிவித்துள்ளது. மலேசிய ஒப்பந்தம் கிடைக்கப் பெற்றாலும், இந்திய விமானப்படைக்கு விமானங்களை வழங்குவதில் எந்த தாமதமும் ஏற்படாது என்றும் உறுதி அளித்துள்ளது. இதுதவிர, தேஜஸ் எம்கே-2 மற்றும் 5ம் தலைமுறை மேம்பட்ட நடுத்தர ரக போர் விமானத்தை தயாரிப்பதற்காக ரூ.40 ஆயிரம் கோடியில் பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளன.