முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மிக முக்கியமான இலக்குகளில் ஒன்றான ‘சிங்கார சென்னை 2.O’ ஒரு பகுதியாக சென்னையில் ரோப் கார் இயக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
மேலும், சென்னையில் எந்தெந்த பகுதிகளில் ரோப் கார் திட்டத்தை அமல்படுத்தலாம் என்று அரசு தரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், குறிப்பாக மெரினா கடற்கரையில் ரோப் கார் இயக்கினால் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருக்கும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், என்ஜினீயர்களும் முடிவுக்கு வந்துள்ளனர்.
அண்மையில், அமைச்சர் கே.என்.நேரு சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களை சந்தித்து பேசியபோது, புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை தெரிவிக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, சில கவுன்சிலர்கள் ரோப் கார் திட்டம் பற்றி குறித்து பரிந்துரைத்தனர். இதனையடுத்து மெரினா கடற்கரையில் ரோப் கார் திட்டத்துக்கு விரிவான பரிந்துரை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் அமையும் ரோப் கார் திட்டம் நேப்பியர் பாலத்தில் இருந்து நம்ம சென்னை செல்பி பாய்ண்ட் வரை அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடைப்பட்ட தொலைவு 3 கி.மீட்டருக்கு ரோப் காரில் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு புதுவிதமான அனுபவமாக அமையும். மேலும், நேப்பியர் பாலத்தில் இருந்து ராயபுரம் ரெயில் நிலையம் பகுதி வரை இந்த ரோப் கார் இயக்கும் திட்டத்துக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அடையாறு ஆற்றின் மீது ரோப் கார் இயக்கும் திட்டமும் பரிசலானையில் உள்ளதாக தெரிகிறது.