எண்ணெய் இல்லாமல் சப்பாத்தி சுடுவதைப் பார்த்திருப்பீர்கள். எண்ணெய் இல்லாமல் பூரி சுடலாம் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் சாஃப்ட் பூரி செய்ய இந்த முறையை ட்ரை பண்ணுங்க.
புஸுபுஸுவென இருக்கும் பூரியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக பூரி இருக்கிறது. ஆனால், எண்ணெயில் சுடப்படுவதால் பலரும் அச்சத்துடனே பூரியைப் பார்க்கிறார்கள். ஆரோக்கியத்துக்கு கேடான எண்ணெயில் செய்யப்படும் பூரியை பலரும் தவிர்ப்பதற்கு காரணம் இதுதான்.
எண்ணெயில் செய்த பூரியை ருசிக்காகவும் ஆசைக்காகவும் ஒன்று சாப்பிட்டுவிட்டால் அது, நெஞ்சு கரித்துக்கொண்டிருக்கும். சரியாக செரிமானம் ஆகாமல் போகும். அதனால், பூரியைப் பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்ற ஆசை மேல் எழுந்தாலும் தவிர்ப்பவர்கள் நிறைய பேர்கள் உண்டு.
உங்களுக்காகவே, புஸுபுஸுவென பூரியை எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுட்டு சாப்பிடலாம். எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 1 கப்
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
கோதுமை மாவு , உப்பு சேர்த்து பூரிக்கு மாவு பிசைவது போல் பிசைந்துகொள்ளுங்கள். அதில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து பிசைந்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக அதை பூரிக்கு ஏற்ப வட்ட வடிவில் உருட்டிக்கொள்ளுங்கள். அதே போல, எல்லா மாவையும் பிசைந்துகொள்ளுங்கள்.
அடுத்ததாக வானலியை வைத்து பூரிக்கு எண்ணெய் ஊற்றுவதுபோல் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.
தண்ணீர் கொதிநிலையை அடையும்போது ஒரு பூரி மாவை போடுங்கள்.
ஒருபுறம் வெந்ததும் மேலே எழும்பி வரும் அடுத்த பக்கமும் திருப்பிப் போடுங்கள். மாவு வெந்ததும் அதை எடுத்துவிடுங்கள்.
அப்படி ஒவ்வொன்றாக சுட்டு எடுத்ததும் அவற்றை இட்லி குக்கர் வைத்து அதற்குள் தட்டு வையுங்கள். இல்லையெனில் கடாய்க்குள் தட்டு வைத்து அதில் பூரியை அடுக்கி சூடேற்ற பூரி புஸ்ஸுனு பொங்கி வரும். அவ்வளவுதான் பூரி தயார். எண்ணெய் இல்லாமல் ஆரோக்கியத்துக்கு கெடுதல் இல்லாத சாஃப்ட்டான பூரியை சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“