ஜம்முவில் பிடிபட்ட லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாதி ஒருவர் பாஜக நிர்வாகியாக இருந்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்முவின் ரியாஸி கிராமத்தில் புதிதாக வந்து தங்கியிருந்த இரு இளைஞர்களின் நடவடிக்கை தொடர்ந்து சந்தேகத்துக்கு இடமாக இருந்து வந்துள்ளது. பகலில் வெளியே செல்வதும் நடு இரவில் வீடு திரும்புவதுமாக அவர்கள் இருந்து வந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள், நேற்று இரவு அவர்களின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அவர்களின் வீட்டில் ஏகே 47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்துள்ளன.
இதையடுத்து, அவர்களின் வீட்டுக்கு அருகே மறைந்திருந்த கிராம மக்கள், நேற்று நள்ளிரவு வீடு திரும்பிய அவர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர் இதுகுறித்து போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களில் ஒருவரான தாலிப் ஹுசேன் ஷா, பாஜக நிர்வாகியாக இருந்து வந்ததும் கண்டறியப்பட்டது.
கடந்த மே 9-ம் தேதி பாஜகவின் ஜம்மு – காஷ்மீர் சிறுபான்மையினர் ஐ.டி மற்றும் சமூக வலைதளப் பிரிவு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தீவிரவாதி ஒருவர் பாஜக நிர்வாகியாக இருந்து வந்தது ஜம்மு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஆர்எஸ். பதானியா கூறுகையில், “பாஜகவில் சேர ஆன்லைன் திட்டம் அறிமுகப்படுத்தியதால் யார் யார் கட்சியில் சேருகிறார்கள் என்பது தெரியாது. மேலும், அவர்களின் பின்புலம் குறித்தும் விசாரிப்பதும் சாத்தியமற்றது. ஆன்லைன் ஆள் சேர்க்கையில் இருக்கும் மிகப்பெரிய பின்னடைவு இதுதான். இதுகுறித்து கட்சி மேலிடத்துக்கு தெரிவித்துள்ளோம். அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள்” என்றார்.
இதனிடையே, இந்த தீவிரவாதிகளை துணிச்சலாக செயல்பட்டு பிடித்து கொடுத்த கிராம மக்களுக்கு ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என ஜம்மு ஏடிஜிபி முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM