இங்கிலாந்தில் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், விராட் கோலி, ஜானி பேர்ஸ்டோ இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பரபரப்பான வீடியோ வைரலாகி வருகிறது.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயனம் செய்து விளையாடி வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் இந்தியா-இங்கிலாந்து இடையே 5வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 416 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 84 ரன்களுடன் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. முதல் இரண்டு நாட்களிலும் மழை பெய்ததால் ஆட்டம் பல முறை இடையிடையே நிறுத்தப்பட்டது.
இந்த போட்டியின் 2வது நாளில், கோஹ்லியும் பேர்ஸ்டோவும் மழையின் போது விடப்பட்ட இடைவேளையின் போது ஒன்றாக நடந்து சென்றனர். அப்போது கோஹ்லி – பேர்ஸ்டோ இருவரும் சிரித்து பேசிகொண்டு சென்றனர்.
இதையடுத்து, 3 வது நாள் ஆட்டம் சரியான நேரத்தில் தொடங்கியது. 3 வது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விராட் கோஹ்லி – ஜானி பேர்ஸ்டோ இருவரும் ஒருவருக்கொருவர் கோபமாக வார்த்தை பரிமாறிகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், கோபமடைந்த பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடினார்.
விராட் கோஹ்லி – ஜானி பேர்ஸ்டோ இருவரும் மைதானத்தில் ஒருவருக்கொருவர் கோபமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வைரலானது. வீடியோவில், முதலில் கோஹ்லி தனது கிரீஸில் நிற்கும்படி சைகை காட்டி பேர்ஸ்டோவிடம் நடந்து செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது. . பின்னர், கோலி தனது கை சைகை செய்வதைக் காண முடிந்தது. பின்னர், அவர் அமைதியாக இருக்கும்படி பேர்ஸ்டோவை சைகை செய்வதைப் பார்க்க முடிகிறது.
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கோலியுடன் பேசிய பிறகு, கோலி புன்னகையுடன் பேர்ஸ்டோவை அணுகி, அவரது கையில் செல்லமாக தட்டி விட்டு சென்றார்.
கோஹ்லி வாக்குவாததில் ஈடுபட்டதற்கு பிறகு, அதுவரை 97 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்து கொண்டிருந்த இங்கிலாந்து அணியில், அதற்கு பிறகு, அதிரடியாக விளையாட அந்த 200 ரன்களைக் கடந்தது. இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சில் 284 ரன்கள் எடுத்துள்ளது. பேர்ஸ்டோ மட்டும் 106 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
கோஹ்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோபபடுத்தியதால் வெகுண்டெழுந்த பேர்ஸ்டோர் அதிரடியாக விளையாடி சதமடித்துவிட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“